இலங்கை மக்களுக்கு உதவ திமுக எம்எல்ஏகளின் ஒரு மாத ஊதியம் மற்றும் கட்சி சார்பில் ஒரு கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி” - என்பது வள்ளுவர் வாக்கு.
“உலகம் உண்ண உண்” என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.
எல்லைகளைக் கடந்து உலக மாந்தராகச் சிந்திப்பதுதான் தமிழர் பண்பு. பிறர் துன்பம் கண்டு முதலில் துடிக்கும் நெஞ்சம் தமிழர் நெஞ்சம். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்னும் உயரிய அறத்தை ஒழுகி நடக்கும் நாகரிகம் நம் நாகரிகம். அந்த வகையில், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி அல்லலுறும் இலங்கை மக்களுக்கு உதவிட முதற்கட்டமாக, 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளைத் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசின் அனுமதியுடன் விரைவில் அனுப்பவுள்ளோம்.
Also Read : இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்குக... தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
மேலும், நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும்.
இத்துடன், திராவிட முன்னேற்றக் கழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்பதையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் அறிவிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.