CAA தொடர்பாக சட்டமன்றத்தில் காரசார விவாதம்... எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஸ்டாலின்

  • News18
  • Last Updated :
  • Share this:
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்திற்கு பிறகு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் நிறைவடைந்ததும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர கடந்த கூட்டத்தொடரில் திமுக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டதாகவும், தற்போது கூட்டத் தொடரிலும் அந்த தீர்மானத்தை கொண்டுவர மீண்டும் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், மற்ற மாநிலங்களைப் போல தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை அனுமதிக்கமாட்டோம் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

மேலும், டெல்லியை போன்று தமிழகத்திலும் தற்போது குடியுரிமை திருத்த சட்டம், என்.பிஆர. என்.ஆர்.சி போன்றவற்றை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டிய ஸ்டாலின், “மக்கள் அமைதியான வழியில் அறப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, வண்ணாரப்பேட்டையில் அறவழியில் மக்கள் போராடினார்கள். ஆனால் காவல் துறை சார்பிலும் அதற்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென அந்த மக்கள் மீது தடியடி நடத்த காவல்துறையினரை தூண்டியது யார் என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின், தடியடி நடத்தியதன் காரணமாக அங்கு வன்முறை சம்பவம் ஏற்பட்டிருக்கிறது. சம்பவ இடத்திற்கு முதல்வரோ, அமைச்சர்களோ சென்று பார்த்திருக்க வேண்டும் எனவும், போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டது வரவேற்புக்குரியது. ஆனால் அதே நேரத்தில் அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதற்கு பதிலளித்த சபாநாயகர், குடியுரிமை தீர்மானம் குறித்து பேச வேண்டாம். வண்ணாரப்பேட்டை விவகாரம் குறித்து மட்டும் பேசுங்கள். சட்டப்பேரவை விதி விதி 173(உ) படி, கடந்த கூட்டத்தொடரில் மறுத்த ஒரு விஷயத்தை மீண்டும் பேச கூடாது. குடியுரிமைத்  திருத்தச் சட்டம் தொடர்பாக பேச அனுமதிக்க முடியாது என்றார். பின்னர் வண்ணாரப்பேட்டை போராட்ட கலவரம் குறித்த எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேச்சுக்கு முதலமைச்சர் பதில் அளித்தார்.

அப்போது, போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தை கைவிடும்படி பலமுறை பேசியும் அவர்கள் களைந்து செல்லவில்லை. உரிய அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்த கூடாது என்று காவல் துறையினர் சொல்லியும் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். உரிய அனுமதி இல்லாமல் நடந்த போராட்டத்தில் பொது சொத்துக்கு சேதாரம் ஏற்பட்டது. பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது.

காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் நடக்கிறது. சில சக்திகளின் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடக்கிறது என்று தெரிவித்த அவர், எந்த ஒரு சிறுபான்மை மக்களுக்கும் எதிராக இந்த அரசு செயல்படாது என்று கூறினார்.

முதலமைச்சரின் விளக்கத்தில் திருப்தி இல்லை என்று தெரிவித்த எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் அவையை வெளிநடப்பு செய்வதாக அறிவித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். திமுகவைத் தொடர்ந்து, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

எதிர்க்கட்சியினர் வெளிநடப்புக்கு பின்னர் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் திமுக சார்பில் லியோனி வந்து பேசிய பின்பே கலவரம் ஏற்பட்டது.

திட்டம் போட்டு இந்த போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்.
தமிழக அரசின் பட்ஜெட் மக்களிடையே நல்ல முறையில் சென்று சேர்ந்து உள்ளது. அதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்த போராட்டம் தூண்டிவிடப்பட்டுள்ளது என்றார்.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published: