Home /News /tamil-nadu /

முடிந்தது செஸ் ஒலிம்பியாட் சலசலப்பு - மீண்டும் வேகமெடுக்கும் தி.மு.க- பா.ஜ.க எதிர்துருவ அரசியல்

முடிந்தது செஸ் ஒலிம்பியாட் சலசலப்பு - மீண்டும் வேகமெடுக்கும் தி.மு.க- பா.ஜ.க எதிர்துருவ அரசியல்

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான கூட்டணி தொடரும். இது கொள்கைக் கூட்டணி என பேசியிருந்தார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான கூட்டணி தொடரும். இது கொள்கைக் கூட்டணி என பேசியிருந்தார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான கூட்டணி தொடரும். இது கொள்கைக் கூட்டணி என பேசியிருந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டின் அரசியல்களம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெகுவாக மாறியது. ஜெயலலிதா, கருணாநிதி அரசியல் களத்தில் தீவிரமாக இருந்தபோது எதிர்கட்சி அரசியல் என்பது மாநில அரசின் செயல்பாடுகளை மையப்படுத்தியதாகவே இருந்து வந்தது. அதுவரையில் தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் இருப்பு என்பது பெரிதாக அறியப்படாத ஒன்றாக இருந்துவந்தது. ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பா.ஜ.க தமிழ்நாட்டின் முக்கிய விவாதமாக இடம்பிடித்தது. அப்போது, எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசை விமர்சிப்பதை விட பா.ஜ.கவையே கடுமையாக விமர்சித்து வந்தார். எடப்பாடி பழனிசாமியையும், அ.தி.மு.கவையும் விமர்சிக்கும்போது கூட பா.ஜ.கவுக்கு அடிமையாக உள்ளது என்பதையே முக்கிய குற்றச்சாட்டாக வைத்துவந்தார்.

மறுபுறம், மத்தியில் ஆளும் அரசாகவும், மாநிலத்தில் ஆளும் அரசுடன் கூட்டணியில் இருந்த பா.ஜ.க, எதிர்கட்சியான தி.மு.கவை விமர்சித்துவந்தது. முந்தைய தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற விவகாரங்களையும், இந்து மதம் சார்ந்து தி.மு.கவின் நிலைப்பாட்டையும் விமர்சித்துவந்தது. தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன், அண்ணாமலை என்று பா.ஜ.கவுக்கு எத்தனை தலைவர்கள் மாறினாலும் தி.மு.கவுக்கு எதிரான கட்சியாகவே பா.ஜ.க தமிழ்நாட்டில் நிலைநிறுத்த முயன்றது. இருகட்சிகளும் ஒருவரையொருவர் மாறி மாறி தீவிரமாக விமர்சித்தாலும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பா.ஜ.க, தி.மு.க கூட்டணி அமைக்கும் என்ற பேச்சுகள் எழுந்தன. ஆனால், காங்கிரஸுடனான கூட்டணியை மு.க.ஸ்டாலின் உறுதி செய்தார். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியே முன்மொழியாதபோது மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.



தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு ஆட்சியமைந்ததிலிருந்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தீவிரமாக விமர்சனம் செய்துவருகிறார். பா.ஜ.கதான் எதிர்கட்சி என்பதை முன்னிருத்த தொடர்ந்து முயன்று வருகிறார். தி.மு.க ஆட்சியமைந்த பிறகு, பா.ஜ.க முன்பைவிட தீவிரமாக எதிர்க்கத் தொடங்கிய நிலையில், தி.மு.கவின் பா.ஜ.க எதிர்ப்பு வேகம் குறைந்ததாகவே அரசியல் வல்லுநர்கள் கருதினர். குறிப்பாக, அ.தி.மு.க ஆட்சியில் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வுக்கு சென்றதை தி.மு.க கடுமையாக எதிர்த்தது. தி.மு.க தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க ஆட்சியில் ஆளுநராக ஆர்.என்.ரவி தமிழ்நாடு அதிகாரிகளை அழைத்து விளக்கம் கேட்கிறார். தமிழ்நாடு அரசு அனுப்பும் நிறைய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். அதற்கெல்லாம், தி.மு.கவிடமிருந்தோ, தமிழக அரசிடமிருந்தோ பெரிய எதிர்ப்பு வரவில்லை. இது, தி.மு.க, பா.ஜ.கவுக்கு பணிந்து செல்கிறது என்ற விமர்சனத்தை ஏற்படுத்தியது.

கடந்த முறை பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தந்திருந்த நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘திராவிட மாடல் என்று பேசியதும், தமிழக அரசின் நிலுவைத் தொகையை மேடையிலேயே கேட்டதும்’ சர்ச்சையை எழுப்பியது. மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்தார். இந்தநிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரைத் தொடங்கிவைக்க பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு அரசு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. மேடையில், மோடியும், மு.க.ஸ்டாலினும் பரஸ்பரம் நெருங்கி பேசியதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் பா.ஜ.க சார்பில் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து, தி.மு.க, பா.ஜ.க கூட்டணியை நோக்கி நகர்கிறது என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்தநிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான கூட்டணி தொடரும். இது கொள்கைக் கூட்டணி. ஒரே மொழி திணிப்பை ஏற்க முடியாது’ என்று பேசியிருந்தார். இது அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்துக்கு அமலாக்கத்துறை சோதனை வரும் என்றும் கூறி எப்போதும் பா.ஜ.க, தி.மு.கவின் எதிரிதான் என்பதை முன்னிறுத்தினார். மேலும், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘தமிழகத்தில் தி.மு.கவின் பேச்சு பா.ஜ.கவுக்கு நேர் எதிராக உள்ளது. மாநிலத்துக்கு சுயாட்சி வேண்டும் என்பதெல்லாம் பா.ஜ.கவின் டி.என்.ஏவுக்கு எதிரானது. அதனால், தி.மு.கவுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை’ என்று தெரிவித்தார்.

அ.தி.மு.க உட்கட்சி மோதலால் தலைப்புச் செய்திகளை மையம் கொண்டிருந்த நிலையில், மீண்டும் தி.மு.க, பா.ஜ.க விமர்சனங்கள் தலைப்புச் செய்தியை நோக்கி நகர்ந்துள்ளன.
Published by:Archana R
First published:

Tags: Annamalai, BJP, DMK, MK Stalin

அடுத்த செய்தி