சிறுபான்மை சமூகத்துக்காக உழைத்த கட்சி எது? -சட்டப்பேரவையில் தி.மு.க, அ.தி.மு.க கடும் விவாதம்

எஸ்.பி.வேலுமணி, துரை முருகன்

சிறுபான்மையினர் நலனில் அக்கறை உள்ளது திமுகவா? அதிமுக?வா என கடும் விவாதம் பேரவையில் நடைபெற்றது.

  • Share this:
தமிழக சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அரசின் தலைமை கொறடாவும், திருவிடைமருதூர் சட்டமன்ற திமுக உறுப்பினருமான கோவி.செழியன், காலையில் பேரவையில் சிறுபான்மையினர் நலனைப் பாதுகாக்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டும் வந்தோம். ஆனால் அதிமுக அதற்கு பதிலளிக்க முடியாமல் வெளிநடப்பு செய்துவிட்டனர் என்றார்.

அப்போது குறுக்கிட்ட அதிமுகவின் கொறடா எஸ்.பி.வேலுமணி, வேறு காரணத்தில்தான் நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்று தெரிவித்தார். ஆனால் அதை வேறுவிதமாக பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் கடந்த அதிமுக ஆட்சியின்போது, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்து பேசியதாகவும், அப்போது இந்த சட்டம் தொடர்பாக தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களிடம் அச்சம் உள்ளதாக தாம் தெரிவித்ததாகவும், அதற்கு பதிலளித்த அமித்ஷா, இந்த சட்டம் மேற்கு வங்கத்தில் சட்டவிரோத ஊடுருவலுக்காகதான் கொண்டு வரப்பட்டதாகவும், இதனால் முஸ்லீம்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு இல்லை என்று கூறியதை சுட்டிக்காட்டினார்.

அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன், குடியுரிமை சட்டத்தினால் இலங்கை தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதே, அதுகுறித்து அமித்ஷாவிடம் தெரிவித்தீர்களா? என கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, காலையில் நீங்கள் வெளிநடப்பு செய்துவிட்டீர்கள், ஆகவே குடியுரிமை திருத்த சட்ட தீர்மானத்தில் அதிமுகவின் நிலை என்ன? என்று நேரடியாக கேள்வி எழுப்பினார்.

அப்போது பதிலளித்த அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி, தாங்கள் எப்போதும் சிறுபான்மையினருக்கு ஆதரவானர்கள் என்றும், கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, இந்தியா முழுவதும் கலவரம் ஏற்பட்டபோது, ஆனால் தமிழகத்தில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அரசுதான் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பாக இருந்ததாக தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மீண்டும் குறுக்கிட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான், ராமர் கோவில் கட்ட செங்கல் கொடுத்து அனுப்பியது யார்? என்று கேள்வி எழுப்பினார். அவை முன்னவர் துரைமுருகன் குறுக்கிட்டு ,இது பெரிய விவகாரம் அதனால் இந்த விவாதத்தை முடிக்க அறிவுறுத்தினார். இதை தொடர்ந்து விவாதம் முடிவுக்கு வந்தது.
Published by:Karthick S
First published: