தி.மு.க கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் - முடிவுக்கு வந்த இழுபறி

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் - முடிவுக்கு வந்த இழுபறி

மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Share this:
    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனையடுத்து, தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை உறுதி செய்யும் பணிகளில் தீவிரம் காட்டிவருகின்றன. அ.தி.மு.கவைப் பொறுத்தவரை பா.ம.கவுடன் தொகுதிப் பங்கீட்டை நிறைவுசெய்துள்ளது. பா.ம.கவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கியுள்ளது. தே.மு.தி.க மற்றும் பா.ஜ.கவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

    தி.மு.கவைப் பொறுத்தவரை ஏற்கெனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள், இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீட்டு கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. அதன்தொடர்ச்சியாக தற்போது இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதி பங்கீட்டை உறுதி செய்துள்ளது. இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதற்கிடையில் காங்கிரஸுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்துவருகிறது.

    தி.மு.கவில் காங்கிரஸுக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்று கே.எஸ்.அழகிரி அவருடைய ஆதங்கத்தை கட்சி நிர்வாகிகளிடம் வெளிப்படுத்தியிருந்தார். இந்தநிலையில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணி ஒப்பந்தத்தில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் கையெழுத்திட்டுள்ளனர். கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும் காங்கிரஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: