தமிழ்நாடு முழுவதும் இன்று 5,446 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 2 -வின் முதன்மை தேர்வு நடைபெற்றது. தேர்வின் தொடக்கமே பல்வேறு காரணங்களினால் தாமதமாகத் தொடங்கியது. இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர்ந்து மதியத் தேர்வு அரை மணி நேரம் தாமதமாக நடைபெற்றது. இந்த நிலையில் இதனைக் கண்டித்தும், தேர்தலில் கவனம் செலுத்தும் தமிழக அரசு தேர்வுகளில் கவனம் செலுத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு துறைகளில் உள்ள 5,446 பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 2 தேர்வுக்கான முதன்மை தேர்வு நடைபெற்றது. பல்வேறு இடங்களில் வினாத்தாளில் உள்ள பதிவு எண்கள் மாறி இருந்ததால் காலை 9.30 மணிக்கு தொடங்க இருந்த தமிழ் மொழி தகுதித் தாளுக்கான தேர்வு தாமதமானது.
வருகைப் பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாள்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் கரணமாக வினாத்தாள்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இதனால் தேர்வர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும், குரூப் 2 தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக அதிர்ச்சி தகவலும் பரவி வருகிறது. இதற்கு டிஎன்பிஎஸ்சி மற்றும் தமிழக அரசின் அலட்சியமே காரணம், ஏனென்றால் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டிருந்தனர். இதனால் கடந்த ஒரு மாதமாக ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் சரியாக செயல்படவில்லை.
குரூப் 2 தேர்வில் ஏற்பட்ட குளறுபடிக்கும் அரசு இயந்திரம் செயல்படாததே காரணம். தேர்தலில் கவனம் செலுத்தும் தமிழக அரசு தேர்வுகளில் கவனம் செலுத்தாதது ஏன்? தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை இதோடு நிறுத்தி கொள்ள வேண்டும். பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்ற குரூப் 2 தேர்வை ரத்து செய்துவிட்டு, மாற்று தேதியில் புதிய தேர்வு நடத்த வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Group 2, Group 2 exam, TNPSC, Vijayakanth