தேமுதிக தலைவர் விஜயகாந்த், வாக்களிக்க வராததால் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 7 மணிவரையில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட வாக்காளர்கள் வாக்குப்பதிவு தொடங்கியது முதலே உற்றசாகமாக வந்து வாக்களித்துச் சென்றனர். தமிழகத்தில் மாலை 7 மணி நிலவரப்படி 71.79 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின.
கொரோனா இரண்டாவது அலை வீசுவதால், பாதுகாப்பான முறையில் வாக்குப்பதிவை நடத்துவதற்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அத்துடன், கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிப்பதற்காக கடைசி ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பிபிஇ கிட் அணிந்து வாக்கு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பாட்டிருந்தன.
அதன்படி, கொரோனா நோயாளிகளும், தேர்தல் பணியாளர்களும்
கவச உடை அணிந்து இறுதி ஒரு மணிநேரத்தின் போது வாக்குப்பதிவை மேற்கொண்டனர். அதேபோல, மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. தேர்தலில் இளம் வயதுடைய, முதன்முறை வாக்காளர்கள் முதல் 105 முதியவர் வரையில் அனைத்து தரப்பு வாக்காளர்களும் வாக்களித்தனர்.
இந்நிலையில், விருகம்பாக்கத்தில் உள்ள காவேரி பள்ளியில், நேற்று காலை 7 மணிக்கு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மட்டும் வந்து வாக்களித்தார். அத்துடன் “விஜயகாந்தும், தன் மகன்களும் பின்னர் வந்து வாக்களிப்பார்கள்” என கூறிச் சென்றார். அதனைத் தொடர்ந்து, பிற்பகலில் விஜயகாந்தின் மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோர் வந்து வாக்களித்துச் சென்றனர்.
அப்போது, ‘விஜயகாந்த் மாலையில் வந்து வாக்களிப்பார்’ என விஜய பிரபாகரன் கூறினார். இதனால் விஜயகாந்தின் வருகையை தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
தேர்தல் பிரச்சார காலத்தில், விஜயகாந்த் தேமுதிக தொண்டர்களையும் கூட்டணி கட்சியினரையும் ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். எனவே விஜயகாந்த் நிச்சயம் வாக்களிக்க வாக்குச் சாவடிக்கு வருவார் என தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
Must Read : கொரோனா தொற்று : முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் மருத்துவமனையில் அனுமதி
ஆனால், வாக்குப்பதிவு நிறைவடையும் 7 மணி வரையிலும் விஜயகாந்த் அங்கு வரவில்லை. இதனால் அங்கே காத்திருந்த தேமுதிகவினர் மிகுந்த வருத்தத்துடன் வீடுதிரும்பினர்.