அமமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை முறிவு?

எல்.கே சுதீஷ்

அமமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையை தேமுதிக நிறுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
அதிமுக - தேமுதிக கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் தாங்கள் கேட்கும் எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வராததால் கூட்டணியிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார் விஜயகாந்த். மேலும் அதிமுக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்று தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தேமுதிக தங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் பொன்ராஜ் வேண்டுகோள் விடுத்தார். அத்துடன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா, எல்.கே.சுதீஸ் ஆகியோரை நேரில் சந்தித்து இது குறித்து பேச இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால், எந்த கட்சியுடனும் தேமுதிக கூட்டணி அமைக்காது என்றும், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டியிடும் எனறும், அதற்கான வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அதேவேளையில் அமமுக கூடன் தேமுதிக திரைமறைவு கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் பேச்சு அடிபட்டது.

அதை தேமுதிக வெளிப்படையாக அறிவிக்காத நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி். தினகரன் தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான் இரண்டொரு நாளில் முடிவு எட்டப்படும் என்று தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து தேமுதிக 50 தொகுதிகளை கேட்டு வருவதாக தகவல் வெளியானது

இந்த நிலையில் தேமுதிக கேட்ட தொகுதிகளையும் அவர்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளையும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வழங்கவில்லை என்ற தகவல் தேமுதிகவினர் இடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தி விட்டதாக தேமுதிக நிர்வாகி தகவல் அளித்தனர்.
Published by:Sheik Hanifah
First published: