காலையில் ஒருமணி நேரம்; இரவில் ஒருமணி நேரம்தான் பட்டாசு வெடிக்கனும் - தமிழக அரசு

மாதிரிப் படம்

தீபாவளிக்கு முந்தைய 7 நாட்களும், தீபாவளிக்கு பின்பு 7 நாட்களும் காற்றின் தரம் ஆய்வுசெய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகளை வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

  தீபாவளியையொட்டி இரவு 8 மணிமுதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த 2 மணிநேரம் போதாது என்றும், கூடுதலாக 2 மணி நேரம் கோரியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்தது. இதனை நிராகரித்த உச்சநீதிமன்றம், எந்த 2 மணிநேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்பதை தமிழக அரசே முடிவுசெய்யலாம் என்று அறிவித்தது.

  இந்நிலையில், தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகை தினத்தில் காலை 6 மணிமுதல் 7 மணிவரையும், இரவு 7 மணி முதல் 8 மணிவரையும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அனைத்து மாநகராட்சிகளிலும் தீபாவளிக்கு முந்தைய 7 நாட்களும், தீபாவளிக்கு பின்பு 7 நாட்களும் காற்றின் தரத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

  உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்றுகூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல, மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதிகாக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  குடிசைப்பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்குமாறும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

  Also see...
  Published by:Vaijayanthi S
  First published: