தீபாவளியையொட்டி டாஸ்மாக் மதுபானங்கள் ரூ. 443 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த விற்பனைத் தொகை சற்று குறைவு என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பண்டிகை நாட்களின்போது டாஸ்மாக் மதுபானங்களின் விற்பனை சாதாரண நாட்களை விட அதிகமாக இருக்கும். குறிப்பாக புத்தாண்டு மற்றும் தீபாவளியின்போது டாஸ்மாக் கடைகள் விற்பனையில் மைல் கல்லை எட்டி விடுகின்றன. எதிர்பார்த்தபடியே நடப்பாண்டிலும், மதுபானங்கள் விற்பனை களை கட்டி வருகிறது.
தீபாவளியையொட்டி, பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மதுப்பிரியர்கள் உற்சாகத்தில் திளைத்துள்ளனர். இந்நிலையில் தீபாவளி சேல்ஸ் குறித்து டாஸ்மாக் நிர்வாகிகள் கூறியதாவது-
தீபாளிக்கு முந்தைய நாளான நவம்பர் 3-ம்தேதி மாலை முதல் விற்பனை நன்றாக இருந்து வருகிறது. அன்றைய தினமும், தீபாவளியான நேற்றும் சேர்த்து மொத்தம் ரூ. 443.03 கோடிக்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளன. இருப்பினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சேல்ஸ் குறைவாகத்தான் இருக்கிறது. கடந்த ஆண்டு, 2 நாட்களில் ரூ. 467.69 கோடிக்கு மது விற்பனையானது.
தென் மாவட்டங்களில் மழை கடுமையாக இருப்பதால் மதுப்பிரியர்களின் வரத்து குறைந்துள்ளது. இதுதான் விற்பனையில் தொய்வு ஏற்பட முக்கிய காரணம். மண்டலங்கள் அடிப்படையில் மதுரையில்தான் விற்பனை ஜோராக நடந்துள்ளது. இங்கு ரூ. 98.89 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ. 90.95 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் ரூ. 79.84 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ. 83.46 கோடிக்கும், சேலத்தில் ரூ. 90.89 கோடிக்கும் விற்பனை நடந்துள்ளது.
அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் மது விற்பனை அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். கடைகள் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். 5 நாட்களில் ரூ. 800 கோடிக்கும் அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.