சென்னை தியாகராய நகரில் தீபாவளியை முன்னிட்டு துணி மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு கடந்த சில நாட்களாக மக்கள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளனர். பண்டிகைக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஆயிரக்கணக்கானோர் ஜவுளி எடுக்க குவிந்தனர். ரங்கநாதன் தெரு உள்ளிட்ட வீதிகளில் ஜவுளிக் கடை, பாத்திர கடை, பலகாரக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால், தனிமனித இடைவெளி கேலிக்கூத்தானது. வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்து வருகை புரிந்திருந்தனர். கடை நுழைவுவாயில் முன் கிருமிநாசினி வழங்கப்பட்டது.
தமிழகத்தின் மையப் பகுதியாக விளங்குவது திருச்சி மாவட்டம். திருச்சி மாவட்டத்தின் இதயப் பகுதியாக இருப்பது பெரியகடைவீதி, சின்னக்கடை வீதி பகுதிகளாகும். இங்கு ஜுவல்லரி, ஜவுளிக்கடைகள், பாத்திரக் கடைகள், இனிப்பகங்கள் என சிறிதும் பெரிதுமாக 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
எனவே வார நாட்களில் குறிப்பாக சனி ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த இரு கடை வீதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டதால் 3000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க குவிந்தனர்.
இதனால் இந்த இரு கடை வீதிகளிலும் கடல் அலை போன்று மனித தலைகள் காணப்பட்டது. எனவே கூட்டத்தை கட்டுப்படுத்த மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. கடை வீதிக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.
சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினாலும் கூட பெரும்பாலான பொதுமக்கள் அதனை கடைபிடிப்பதில்லை, அதை கண்கூடாக இங்கு காண முடிகிறது.