தீபாவளியன்று விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 700-க்கும் அதிகமானோர் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உலகம் முழுவதும் தீபாவளிப் பண்டிகை நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகம் இருந்ததால் பெரிய அளவில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.
தற்போது கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளதால், மக்கள் மீண்டும் பழைய உற்சாகத்துடன் பண்டிகையை கொண்டாடினர். இதற்கு ஏதுவாக பண்டிகையன்றும், மறுநாளான இன்றும் அரசு விடுமுறை அளித்துள்ளது. தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால், கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.
இதற்கிடையே, காற்று மற்றும் ஒலி மாசுபாட்டை கவனத்தில் கொண்டு பட்டாசு வெடிக்கும் நேரத்திற்கு தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதாவது காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த கட்டுப்பாடு விதிகளை மீறி பட்டாசுகளை வெடித்ததாக சென்னையில் மட்டும் 758 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதேபோன்று, அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசுகளை விற்பனை செய்ததாக 239 கடைகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, பட்டாசு வெடிக்கப்பட்டு அதனால் எழுந்த கரும்புகை காரணமாக சென்னையில் காற்று அதிகளவு மாசுபட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை தேனாம்பேட்டையில் அதிகபட்சமாக காற்றின் தரக்குறியீடு 181 ஆக பதிவாகியிருக்கிறது. அரும்பாக்கம் : 176, வண்டலூர் : 125, போரூர் : 122, மணலி : 154 ஆக பதிவாகியுள்ளது. இது மனிதர்கள் சுவாசிப்பதற்கான ஆரோக்கியமான காற்று இல்லை என தரவுகள் தெரிவிக்கின்றன.
காற்றில் கலந்திருக்கும் நுண் துகள்களின் எண்ணிக்கை அடிப்படையில் காற்றின் தரக்குறியீடு கணக்கிடப்படுகிறது. இது, 00 - 50 வரை இருப்பின் ஆரோக்கியமானது. 51 - 100 வரை இருப்பின் மிதமான காற்று சுவாசிக்க ஏதுவானது. 101 - 150 உடல்நலக்குறை ஏற்படுபவர்கள், சுவாசப்பிரச்சனை உள்ளவர்கள் சுவாசிக்க உகந்த காற்று அல்ல. 151 - 200 ஆக இருப்பின் ஆரோக்கியமான காற்று அல்ல என்று பொருள் கொள்ளலாம். நேற்று ஒரு நாளில் வெடித்த பட்டாசு புகையால் இயல்பைவிட 20 மடங்கு காற்று மாசுடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.