Exclusive: சசிகலாவின் துரோகிகள் வெளியில் இல்லை.. எங்கள் குடும்பத்தில்தான் இருக்கிறார்கள் - திவாகரன்

சசிகலா

சசிகலா அவர்களின் விருப்பப்படி அதிமுக வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும். இதுவே எனது விருப்பமும் என்று திவாகரன் கூறியுள்ளார்.

  • Share this:
சசிகலாவின் முடிவை முழுமனதோடு வரவேற்கிறேன் என்றும், சசிகலாவின் துரோகிகள் வெளியில் இல்லை, எங்கள் குடும்பத்தில்தான் இருக்கிறார்கள் எனவும் நீயூஸ் 18க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் முதலமைச்சர் ஆக வேண்டும் எனக் கோரி மூத்த நிர்வாகிகள் அவரது வீட்டிற்கே சென்று வலியுறுத்தினர். இதையடுத்து அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

ஆளுநராக பொறுப்பு வகித்த மகராஷ்ட்ரா ஆளுநர் தமிழ்நாட்டுக்கே வரவில்லை. திட்டமிட்டே ஆளுநர் தாமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறைக்கு செல்லும் முன்பாக ஆட்சியைக் காப்பாற்றி எடப்பாடி கே.பழனிச்சாமியை முதலமைச்சராக்கி விட்டு, ஜெயலலிதா சமாதியில் சத்தியம் செய்து விட்டு சென்றார் சசிகலா. நான்கு ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு கடந்த ஜனவரி 27ஆம் தேதி விடுதலையானார்.

இதற்கிடையில் பிரிந்த அதிமுகவின் ஒபிஎஸ் - இபிஎஸ் இணைந்தனர். பொதுச் செயலாளர் சசிகலா, துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாகவும் அறிவித்தனர்.

சிறையில் இருந்து வெயியேவந்த சசிகலா, நானே அதிமுகவின் பொதுச்செயலாளர், தன்னை நீக்கியது செல்லாது என்று அறிவித்தார். அதிமுகவினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பொதுஎதிரி திமுகவை வீழ்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அரசியல் களமும் சூடுபிடிக்கத் தொடங்கியது. இந்நிலையில்தான் அரசியலை விட்டு ஒதுங்குவதாக. வி.கே.சசிகலா நேற்று இரவு அதிரடியாக அறிவித்தார். ஜெயலலிதாவுடன் கால் நூற்றாண்டுக்கு மேல் தேர்தல் கூட்டணி, வியூகத்தில் முக்கிய பங்காற்றிய சசிகலா தற்போது களத்தை விட்டு விலகியிருப்பது அரசியல் களத்தில் அதிர்ச்சியையும் பல்வேறு யூகங்களையும் கிளப்பியுள்ளது.

இது குறித்து சசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிடர் கழகப் பொதுச் செயலாளருமான திவாகரன் நீயூஸ் 18 க்கு அளித்த பிரத்யேக பேட்டியில், சசிகலா ஒரு வீராங்கனை. சரியான நேரத்தில் போர்க்களத்திலிருந்து பின்வாங்கியதைப் போல் இந்த முடிவை அறிவித்துள்ளார். இதற்கு காரணம் அவரை துரோகிகள் முதுகில் குத்த உள்ளதை அறிந்து இந்த முடிவை எடுத்துள்ளார்.



சசிகலாவின் முடிவை முழு மனதாக வரவேற்கிறேன். துரோகிகள் வெளியில் இல்லை. எங்கள் குடும்பத்தில்தான் இருக்கிறார்கள். அவரைச் சுற்றியுள்ள டிடிவி தினகரன் உள்ளிட்டோரால்தான் சசிகலா இந்த முடிவை எடுத்துள்ளார். அவர் அரசியலுக்கு வருவதை விட அவருடைய உடல் நலனே முக்கியம்.

டிடிலி தினகரன் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டதும், அமமுக தலைமையிலான கூட்டணியில் அதிமுக வரவேண்டும் என்று தினகரன் தெரிவித்ததும் சிறுபிள்ளைத் தனமானது. சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து முயற்சிகள் ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, தினகரன் பேசியது இணைப்பு முயற்சியில் ஈடுபட்ட அதிமுகவினரின் கோபத்தை அதிகரித்திருக்கும்.

Must Read: வி.கே. சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

 

இது கூட சசிகலாவின் அறிவிப்பிற்கு காரணமாக இருக்கலாம். சசிகலா அவர்களின் விருப்பப்படி அதிமுக வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும். இதுவே எனது விருப்பமும்” என்றார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: