தந்தை, மகன் கொலை வழக்கு : கோவில்பட்டி சிறையில் மாவட்ட நீதிபதி 3 மணி நேர விசாரணை

தந்தை, மகன் கொலை வழக்கு : கோவில்பட்டி சிறையில் மாவட்ட நீதிபதி 3 மணி நேர விசாரணை
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்
  • Share this:
ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் கோவில்பட்டி சிறைச்சாலையில் மாவட்ட நீதிபதி இன்று விசாரணை செய்தார். 

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் (58), அவரது மகன் பென்னிக்ஸ்(31) ஆகியோர் கடந்த மாதம் 19-ம் தேதி சாத்தான்குளம் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பென்னிஸ் கடந்த 22-ம் தேதி இரவும், ஜெயராஜ் 23-ம் தேதி அதிகாலையும் அடுத்தடுத்து  உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன், ஏற்கெனவே, கோவில்பட்டி கிளைச் சிறை, சாத்தான்குளம் காவல் நிலையம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தினர்.


மேலும் சிபிசிஐடி போலீசாரும் தனியாக விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் கடந்த 9ம் தேதி வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. இருந்தாலும் கடந்த 9-ம் தேதி கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் கிளைச் சிறையில் சுமார் 20 நிமிடங்கள் விசாரணை நடத்தினார். நேற்று முதல் சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இன்று  காலை 10.45 மணிக்கு கோவில்பட்டி கிளை சிறைக்கு மாவட்ட நீதிபதி பாரதிதாசன் சென்றார். அங்கு சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் இறப்பு தொடர்பாக, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, மற்ற சிறை அறைகளில் இருந்த கைதிகளிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்.

மேலும் சிறை கண்காணிப்பாளர் மற்றும் வார்டன்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் அளித்த வாக்குமூலம் உடனடியாக தட்டச்சர் மூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த விசாரணை சுமார் 3.25 மணி நேரம் நடைபெற்றது. மேலும் கோவில்பட்டி கிளைச் சிறையில் கண்காணிப்பு கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
First published: July 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading