தமிழகத்துக்கு ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனையடுத்து, அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு அமைக்கும் பணியில் தீவிரம் காட்டிவருகின்றன. தி.மு.கவுடன் கூட்டணி அமைக்கும் ஏழு கட்சிகளுடன் அக்கட்சி பேட்சுவார்த்தை நடத்திவருகிறது. தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் வழங்குவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை தி.மு.க தொடங்கியுள்ளது. முன்னதாக, கடந்த 26-ம் தேதி தமிழக காங்கிரஸ் கட்சி மேலிடப் பொறுப்பாளர் குண்டு ராவ், உம்மன்சாண்டி, சந்தீப்சிங் சுர்ஜிவாலா உள்ளிட்ட தேசியத் தலைர்கள் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது முடிவு எட்டப்படவில்லை.
இந்தநிலையில், இன்று இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இன்றைய பேச்சுவார்த்தையில் கே.எஸ்.அழகிரி, கே.ஆர்.ராமசாமி, கோபன்னா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தி.மு.க சார்பில் தொகுதி பங்கீட்டு குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.