ராஜீவ் காந்தியின் கொலையில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்த ஏழு பேரில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பரோல் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், முருகன் பலமுறை உண்ணாவிரதம் இருந்தும் இதுவரை அவருக்கு பரோல் வழங்கப்படவில்லை என நளினியின் வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய இந்த மனு மீது விசாரணை நடத்தியது, அப்போது, பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது. ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு எதிராக சொந்த கண்ணோட்டத்தில் செல்ல தனி அதிகாரமில்லை.
உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பின் படி, 7 பேர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையே முடிவெடுக்கலாம். அமைச்சரவை முடிவுக்கு எதிராக ஆளுநர் சென்றால் அது கூட்டாட்சி அமைப்பில் மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. தொடர்ந்து, இந்த வழக்கில் மே.18ம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் , 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததது.
பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து, மீதமுள்ள 6 பேர் விடுதலை தொடர்பாக கேள்வி எழுந்துள்ளது. இந்த தீர்ப்பை முன்னுதாரணமாக கொண்டு மற்ற 6 பேரும் தங்களை விடுதலை செய்ய கோர முடியும் என்றும், தமிழக அரசே 6 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வாய்ப்புகள் உள்ளது என்றும் சட்ட வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் பெண்கள் சிறையில் இருந்த நளினிக்கு பரோல் வழங்கப்பட்டது. இவர் தற்போது காட்பாடி , பிரம்மபுரம் பகுதியிலுள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். நளினியை சந்திப்பதற்காக அவரது வழக்கறிஞர் புகழேந்தி இன்று அவரது வீட்டிற்கு சென்றபோது, காவல்துறையினர் அவருக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.
தொடர்ந்து, நளினியை சந்திக்க அனுமதி தரவேண்டும் என காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் புகழேந்தி் அவரது வீட்டின் முன்பு அமர்ந்து காத்திருந்தார். பின்னர், நளினியை சந்திக்க சிறைத் துறைக்கு கடிதம் எழுதி காவலர் மூலம் அனுப்பியுள்ளார். இதையடுத்து, புகழேந்திக்கு அனுமதி வழங்கப்பட்டு அவர் நளினியை வீட்டில் சென்று சந்தித்தார்.
தொடர்ந்து, நளினியை சந்தித்தபின் வழக்கறிஞர் புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது, பேரறிவாளன் விடுதலைக்குப்பின் தாங்களும் விடுதலை செய்யப்படுவோம் என நளினி மகிழ்ச்சியாக உள்ளார். விடுதலையில் பாரபட்சம் காட்டப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. ஏழு பேரில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பரோல் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், முருகன் பலமுறை உண்ணாவிரதம் இருந்தும் இதுவரை அவருக்கு பரோல் வழங்கப்படவில்லை.
தமிழக அரசு மீதமுள்ள ஆறு பேரையும் விடுதலை செய்யும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் பாரபட்சம் என்ற குற்றச்சாட்டு நீங்கும். இவர்கள் விடுதலை குறித்து திங்கட்கிழமை தமிழக அரசு மூலம் நல்ல முடிவு வர உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது என கூறினார்.
முன்னதாக, ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் ஆண்கள் சிறையில் உள்ள முருகன் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என கடந்த 18 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். இந்நிலையில் 6 நாட்கள் அவருக்கு பரோல் வழங்கப்படுப்படும் என சிறை அதிகாரிகள் உத்தரவாதம் அளித்ததின் பேரில் தற்போது உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nalini, Perarivalan