Home /News /tamil-nadu /

ஆரணியில் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு

ஆரணியில் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு

ஆரணியில் கண்டுபிடிக்கப்பட்ட கொற்றவை சிற்பம்

ஆரணியில் கண்டுபிடிக்கப்பட்ட கொற்றவை சிற்பம்

கொற்றவை சிற்பம் தலையில் கரண்ட மகுடமும், எட்டு கரங்களில், வாள், வில், பிரயோக சக்கரம், போர் சங்கு, போன்ற பலவகை ஆயுதங்களுடன் காட்சிதருகிறது.

  திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என இதனைக் கண்டுபிடித்த முன்னாள் தலைமை ஆசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான ஆர்.விஜயன் தெரிவித்துள்ளார். சுமார் ஐந்து அடி உயரமும், நான்குடி அகலமும் உடைய பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ள கொற்றவையின் உருவம். தலையில் கரண்ட மகுடமும், எட்டு கரங்களில், வாள், வில், பிரயோக சக்கரம், போர் சங்கு, போன்ற பலவகை ஆயுதங்களுடன் காட்சிதருகிறது.

  பழங்காலம் முதற்கொண்டு கொற்றவை தெய்வத்தை தமிழ் மக்கள் வணங்கி வருகின்றனர். போர் நடைபெறும் காலத்தில் தம்முடைய மன்னர் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக ஒரு சில வீரர்கள் கொற்றவையிடம் வேண்டிக்கொள்வர். அதற்காக நீளமான கத்தியால் தமது உடலில், கழுத்து, மார்பு என ஒன்பது இடங்களில் தம்மைத்தாமே வெட்டிக்கொண்டு உயிரைவிடுவர். இது நவகண்ட பலி எனப்படும். இதனை கொற்றவை சிற்பத்தின் முன்பாக நின்றுகொண்டு நிறைவேற்றுவர். இத்தகைய வீரர்களின் நினைவாக நடுகல் அமைத்து வழிபடுவது தமிழர் மரபாகும்.

  இத்தகைய வழிபாட்டு முக்கியத்துவம் பெற்ற கொற்றவை சிற்பம் தற்போது கண்டெடுத்ததன் காரணமாக, ஆரணியின் வரலாறானது இதுநாள் வரையில் சோழர் காலத்திலிருந்து தொடங்கப்பட்ட நிலைமாறி பல்லவர் காலத்து பழமையான வரலாற்று தொடக்கமாக அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பழைய வரலாற்று அடையாளங்களை மீட்டெடுக்கும் முயற்சியில், 'வட ஆற்காடு மாவட்ட வரலாற்று குழுமம்' சார்பில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எழுத்தாளர் எஸ். பொன்னம்பலம், முனைவர் அமுல்ராஜ், முப்பதுவெட்டி கிரண்குமார், தலைமை ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் இதற்கான ஆய்வுகளை மேற்கொண்டுவரும் நிலையில் இச்சிற்பமானது கண்டெடுக்கப் பட்டுள்ளது.

  ஆரணி, கமண்டல நாகநதியின் வட கரையில் பழங்காமூர் என்ற இடம் உள்ளது. இதுவே ஆரணி நகரின் தொடக்கக்கால ஊராகும். இந்த ஆற்றின் தென்கரையில் புதுகாமூர் என்ற இடம் பின்னர் உருவானது. காமூர் என்றால் அழகிய ஊர் என்று பொருளாகும். அதன் பின் ஆரணியில் கோட்டை கட்டியகாலத்தில் ஆரணி பாளையம் என்ற இடம் உருவானது. பிற்காலத்தில் இவைகள் இணைந்தே ஆரணி நகரமாக விரிவடைந்தது. ஆரணி புதுகாமூர் சிவன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளின் அடிப்படையில், ஆரணி வரலாறானது சோழர்காலம் தொடங்கியே எழுதப்பட்டுவந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள கொற்றவையின் சிற்பத்தினால் பல்லவர் காலத்து பழமையான வரலாற்றை நோக்கிச் செல்லுகிறது.

  பழங்காமூர் சிவன் கோயிலின் தெற்கில் உள்ள ஆற்றங்கரையில் நெடுங்காலமாக இருந்த இந்த கொற்றவை சிற்பமானது தற்போது குடியிருப்புகளின் அருகில், திறந்தவளி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. சுமார் ஐந்து அடி உயரமும், நான்கு அடி அகலமும் உடைய பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக கொற்றவையின் உருவம் காணப்படுகிறது. தலையில் கரண்ட மகுடமும், இவரது எட்டு கரங்களில், வாள், வில், பிரயோக சக்கரம், போர் சங்கு, போன்ற பலவகை ஆயுதங்களுடன் காணப்படுகிறார். நின்ற நிலையில் உள்ள இவரது பாதங்களின் கீழாக அசுரனை வென்றதன் அடையாளமாக எருமையின் தலைப்பகுதி செதுக்கப்பட்டுள்ளது.

  கானமர் செல்வி எனப்படும் இவர், பாலையும் குறிஞ்சியும் இணைந்த காட்டின் தலைவியாகக் கருதப்படுகிறார். இவருக்கும் பின்னால் கலைமான் ஒன்றின் உருவம் பெரியதாக செதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக மானின் உருவத்துடன் கொற்றவை சிற்பம் கிடைப்பது அரிது ஆகும். இவ்வகையில் ஆரணியில் கிடைத்த இந்த சிற்பம் முக்கியத்துவம் பெறுகிறது.

  Must Read : 5 மாதங்களாக ஊதியம் கிடைக்காததால் உயிரிழப்பு: கவுரவ விரிவுரையாளர்கள் துயர் துடைக்கப்படுமா? - ராமதாஸ் கேள்வி

  கி.பி.8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த சிற்பம் ஏறத்தாழ 1200 ஆண்டுகளுக்கு முன்பாகவே இங்கு வழிபாட்டில் இருந்துள்ளது. இதன் மூலம் ஆரணியின் வரலாறானது பல்லவர் காலத்தைச் சேர்ந்த பெருமையுடையது என்று வரலாற்று ஆய்வாளர் ஆர்.விஜயன் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது வைத்தியநாத ஐயர் உடனிருந்து உதவி செய்தார்.

  செய்தியாளர் - மோகன்ராஜ், ஆரணி.
  Published by:Suresh V
  First published:

  Tags: Arani

  அடுத்த செய்தி