அதிமுக தேர்தல் அறிக்கை புரியாமல் பேசிய திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுக தேர்தல் அறிக்கை புரியாமல் பேசிய திண்டுக்கல் சீனிவாசன்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

தேர்தல் பிரசாரத்தின் போது வனத்துறை அமைச்சர் சீனிவாசன், வாக்குறுதி பற்றிய புரிதல் இன்றி பேசினார்.

  • Share this:
தமிழகத்தில் அடுத்த மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார்.

கடந்த 13-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று மாலை திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள குமரன் திருநகரில் தனது தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். அப்போது குமரன் நகரில் உள்ள கோவிலிலிருந்து அவருக்கு பூரண கும்ப மரியாதை மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. தீபாராதனை காட்டிய வருக்கு அன்பளிப்பாக பணம் வழங்கினார் திண்டுக்கல் சீனிவாசன்.

பின்னர் அவர் பேசுகையில், திண்டுக்கல்லில் இருந்து பழனிக்கு ரூ.50 கட்டணத்தில் இரண்டு பெண்கள் செல்லலாம் என்று கூறினார். அதிமுகவின் தேர்தல் அறிக்கையில், நகர அரசுப்பேருந்துகளில் பெண்களுக்கு பாதி கட்டணம் என கூறப்பட்டுள்ளது. ஆனால், அமைச்சரோ, திண்டுக்கல் - பழனி இடையே இயக்கப்படும் வேகப் பேருந்தில் பெண்களுக்கு கட்டணம் குறைக்கப்படும் என்று வாக்குறுதி புரியாமல் மாற்றிக் கூறினார்.

சோலார் அடுப்பு பற்றி பேசியபோது, மண்ணெண்ணெய் ஊற்றாமல் என்று கூறுவதற்கு பதில் பெட்ரோல் ஊற்றாமல் அடுப்பை பயன்படுத்தலாம் என்று அமைச்சர் உளறினார்.

முன்னதாக பாடகி சுதா ரகுநாதனை பரதநாட்டியக் கலைஞர் என்று விழா ஒன்றில் மாற்றிக் கூறிய அமைச்சர் திண்டுக்கல் கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடியின் பேரன் ராகுல்காந்தி என்றார்.

அதேபோல் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்கு சேகரிக்க சென்ற போது சோலைமுத்துவுக்கு வாக்களியுங்கள் என்று கூறினார். மேலும் ஒரு இடத்தில் கூட்டணி கட்சியான பாமகவின் மாம்பழம் சின்னத்துக்கு பதிலாக ஆப்பிள் பழத்துக்கு வாக்களியுங்கள் என்று கேட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: