திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அடுத்த வாணிக்கரை ஊராட்சியில் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த பெருமாயி என்பவர் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதேபோல், அதே சமூகத்தைச் சேர்ந்த வேல்முருகன், காளீஸ்வரி, சந்திரகலா ஆகியோர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவர் பேபி, தங்களை வேண்டுமென்றே புறக்கணிப்பதாகவும், ஊராட்சிமன்ற கூட்டங்களில் பங்கேற்க விடுவதில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மீறி பங்கேற்றால் தங்களை நாற்காலியில் அமர வைக்காமல் தரையில் அமர வைப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து தங்களிடம் கலந்து ஆலோசிப்பதில்லை என கூறும் துணை தலைவர் பெருமாயி, இது குறித்து கேள்வி எழுப்பினால், ஊராட்சி மன்ற தலைவர் பேபி மிரட்டுவதாக குற்றம் சாட்டி உள்ளார்.
Also read: காவலர் முகத்தில் கொதிக்கும் டீயை ஊற்றிய பெண் - பீகாரில் அதிர்ச்சி சம்பவம்
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சிமன்ற உயரதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஊராட்சிமன்ற தலைவர் பேபியிடம் நமது செய்தியாளர் தொலைபேசி மூலம் கேட்டபோது, ஊராட்சிமன்ற துணைத் தலைவரின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என கூறினார். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்