Home /News /tamil-nadu /

கொடைக்கானல் 1500 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர் - 8 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

கொடைக்கானல் 1500 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர் - 8 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

கொடைக்கானல்

கொடைக்கானல்

ட்ரோன் கேமராவை தாழ்வாக‌ ப‌ற‌க்க‌விட்டு கண்காணித்ததில் 1400 அடி பள்ளத்தாக்கு ப‌குதியில் மாயமான இளைஞர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

    கொடைக்கானலில் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் 1500 அடி பள்ளத்தில் விழுந்த நிலையில், 8 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதி அருகே வனத்துறையினரால் தடை செய்யப்பட்ட ரெட்ராக் பகுதியில்  மதுரையை சேர்ந்த ராம்குமார் (வயது 32) என்ற இளைஞர் கடந்த 2ஆம் தேதி  பாறையின் நுனி பகுதிக்கு சென்று செல்பி எடுக்க முயன்ற போது தவறி பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்து மாயமானதாக உடன் வந்த அவ‌ர‌து நண்பர்களால் தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து. இதனையடுத்து தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள், ம‌லையேற்ற‌ குழுவின‌ர் என சுமார் 30க்கும் மேற்பட்டோர்  கடந்த 5 நாட்களுக்கும் மேலாக‌ ரெட்ராக்  அடர்ந்த வனப்பகுதிக்குள்ளும், ப‌ள்ளத்தாக்கு ப‌குதிக‌ளிலும்  மாயமான இளைஞரை தேடி வந்தனர்.

    Also Read:  சர்ச்சை வீடியோ: பாஜக சவுதாமணியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி

    மற்றொரு பக்கம் கடந்த 5 தினங்களுக்கும் மேலாக‌ மாயமான இளைஞரை ட்ரோன் கேமரா மூலம் தேடும் பணியும் நடைபெற்று வந்தது, இந்நிலையில் இர‌ண்டு தின‌ங்க‌ளுக்கு முன்பு மாலை வேளையில் ரெட்ராக் செங்குத்தான மலைச்சரிவு பள்ளத்தாக்கு பகுதியில்  ட்ரோன் கேமராவை தாழ்வாக‌ ப‌ற‌க்க‌விட்டு கண்காணித்ததில்  1400 அடி பள்ளத்தாக்கு ப‌குதியில் மாயமான இளைஞர் சம்பவத்தன்று அணிந்திருந்த அவரது சட்டை மட்டும்  கண்டறியப்பட்ட‌து.

    இதனை தொடர்ந்து  வனத்துறையினர் மற்றும் மலையேற்றம் தெரிந்த குழுவினர் சுமார் 10க்கும் மேற்பட்டோர் மாயமான இளைஞர் அணிந்திருந்த சட்டை  கிடந்த‌ பள்ளத்தாக்கு சுற்றுவ‌ட்டார‌ பகுதியில் இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டனர்,அப்போது சட்டை கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூர‌த்தில் பாறையின் இடுக்கு பகுதியில் சுமார் 1500 அடி  பள்ளத்தாக்கு பகுதியில் அழுகிய நிலையில்  இளைஞ‌ரின் சடலத்தை கண்டறிந்தனர்.மேலும்  இருள் சூழ்ந்துவிட்ட‌தாலும், அட‌ர் ப‌னி மூட்ட‌ம் நில‌விய‌தாலும், வ‌ன‌ வில‌ங்குக‌ளின் ந‌ட‌மாட்ட‌த்தினாலும் மீட்பு ப‌ணியில் தொய்வு ஏற்ப‌ட்ட‌து.

    Also Read: பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

    ச‌ட‌ல‌த்தினை அதே ப‌குதியில் சாக்கு பையில் பாதுகாப்பாக‌ க‌ட்டி வைத்து விட்டு வ‌ட்ட‌க்கானல் ப‌குதிக்கு திரும்பின‌ர். இதனையடுத்து 8 வது நாளான நேற்று வனத்துறையினர், உள்ளூர் ம‌லையேற்ற‌க்குழுவின‌ர், தீய‌ணைப்புதுறையின‌ர் இணைந்து இரு குழுக்க‌ளாக‌ பிரிந்து  ஒரு குழுவின‌ர் 1500 அடி பள்ள‌த்தாக்கு ப‌குதிக்கு சென்றும் ம‌ற்றொரு குழுவின‌ர் ரெட்ராக் மேல்புற‌ ப‌குதியில் நின்றும்,  பாறை ப‌குதியில் துளையிட்டு த‌ற்காலிக‌ ஏணி அமைத்து ஏணி  மூல‌மாக‌ ராட்ச‌த‌ க‌யிற்றினில் ட‌ய‌ரை க‌ட்டி  1500 அடி த‌ரைப்ப‌குதிக்கு அனுப்பி வைத்த‌ன‌ர்.

    த‌ரைப்ப‌குதியில் இருந்த‌ ம‌ற்றொரு குழுவின‌ர் ராட்ச‌த‌ க‌யிறு ட‌ய‌ருட‌ன் த‌ரைப்ப‌குதியை சென்று அடைந்த‌ நிலையில் க‌ட்டி வைத்த‌ சாக்கு பையில் இருந்த‌ இளைஞ‌ரின் ச‌ட‌ல‌த்தினை ராட்ச‌த‌ க‌யிற்றில் இணைத்து மேல் ப‌குதிக்கு அனுப்பும் ப‌ணியில் ஈடுப‌ட்ட‌ன‌ர். ச‌ட‌ல‌ம் க‌யிற்றின் மூல‌ம் ச‌ரியாக‌ மேல்  ப‌குதிக்கு வ‌ருவதை டிரோன் கேமரா மூல‌ம் தொட‌ர்ந்து க‌ண்காணித்தும் வ‌ந்த‌ன‌ர்.

    மேலும் ரெட்ராக் மேல்ப‌குதியில் இருந்த‌ குழுவின‌ர் ராட்ச‌த‌ க‌யிற்றை மேல்புற‌மாக‌ இழுத்ததை தொட‌ர்ந்து ச‌ட‌ல‌ம் ரெட்ராக் மேல்ப‌குதிக்கு வ‌ந்த‌டைந்த‌து, இத‌னை தொட‌ர்ந்து  மீட்க‌ப்ப‌ட்ட‌ ச‌ட‌ல‌த்தினை கொடைக்கான‌ல் அர‌சு  ம‌ருத்துவ‌ம‌னைக்கு கொண்டு  உட‌ற்கூறு ஆய்வு செய்ய‌ அனுப்பிவைக்கப்பட்டது.  இந்த சம்பவம் தொடர்பாக ராம்குமாரின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் : ஜாப‌ர்சாதிக் (கொடைக்கானல்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime News, Friends meet at Kodaikanal, Kodaikanal, Police, Selfie, Selfie death

    அடுத்த செய்தி