கொடைக்கானல் அருகே செம்பிரான்குளம் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை ஊரடங்கில் ட்ரெக்கிங் மேற்கொண்ட வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த 10 இளைஞர்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கால் நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைவாசஸ்தலங்களுக்கு சுற்றுலா பயணிகளின் வருகைக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கடந்த சனிக்கிழமை மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதியில் இருந்து இளைஞர்கள் சிலர் வந்துள்ளனர். அப்போது கொடைக்கானல் பகுதியில் வசிக்கும் இளைஞர் உதவியோடு கொடைக்கானல் வடகவுஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட செம்பிரான் குளம் கிராமத்தின் மலை மீது 10 இளைஞர்கள் ட்ரெக்கிங் சென்றுள்ளனர். மேலும், தாங்கள் ட்ரெக்கிங் மேற்கொண்ட விடியோவை சமூக வலைத்தளங்களிலும் இளைஞர்கள் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இதனையடுத்து வடகவுஞ்சி கிராம நிர்வாக அலுவலர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கொடைக்கானல் காவல் துறையினர் திண்டுக்கலை சேர்ந்த ஹரிஹரன், கோபிநாத்,கொடைக்கானலை சேர்ந்த முத்து, ஆனந்த், வினோத் குமார், மணிகண்டன் உள்ளிட்ட 6 இளைஞர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் ஊரடங்கு விதிகளை மீறி விவசாய பணிகள் என்று பொய் கூறி கொடைக்கானலுக்கு வந்ததும், மலை உச்சி மீது ட்ரெக்கிங் மேற்கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவர்களுடன் மதுரையை சேர்ந்த விஜய ராகவன், கண்ணன், ஜெயபிரகாஷ், பிரித்திவிராஜ் உள்ளிட்ட 10 நபர்கள் மீது, பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் நோய் தொற்று பரப்புதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இளைஞர்கள் பயன்படுத்திய ஜீப் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களை கொடைக்கானல் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, கொரோனா ஊரடங்கு நேரத்தில் விவசாயம் மற்றும் மருத்துவம் என்று பொய் காரணங்கள் கூறி கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் எச்சரித்துள்ளார்.
மேலும் கொடைக்கானல் மலை பகுதிகளில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவலர்கள் நியமிக்கப்பட்டு கொடைக்கானல் மலை பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையும் மீறி கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துணை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
செய்தியாளர் - ஜாபர்சாதிக்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dindugal, Kodaikanal, Lockdown, Madurai