கொடைக்கானலில் தொடர்விடுமுறையைக் கொண்டாடி மகிழும் சுற்றுலாப் பயணிகள், மலைகளில் தவழும் பனி மூட்டங்களை கண்டு மகிழ்ச்சி.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலுக்கு வார விடுமுறை மற்றும் பண்டிகைகள் கால விடுமுறையில் சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருவது வழக்கமான ஒன்று, இந்நிலையில் நான்கு நாட்கள் தொடர்விடுமுறையை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை இன்று காலை முதலே அதிகரித்து காணப்படுகின்றது.
குறிப்பாக வனப் பகுதிகளில் இருக்கும் சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், குணா குகை, பசுமைப் பள்ளத்தாக்கு, தூண் பாறை, பைன்மரக்காடுகள், மன்னவனூர் ஏரி, பேரிஜம் ஏரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேகக் கூட்டங்கள் சூழ்ந்து இருப்பதையும், மேகக்கூட்டங்களின் நடுவே தெரியும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நிலவும் இதமான காலநிலையை அனுபவித்தவாறு மகிழ்ந்து வருகின்றனர்.
Read More : மண்ணை சாப்பிட்டு எலும்பும் தோலுமாக மாறிய மூதாட்டி.. சொத்துக்காக பூட்டிவைத்து மகன்கள் செய்த கொடூரம்
மேலும் நகரின் மையப் பகுதியில் இருக்கும் நட்சத்திர வடிவிலான ஏரியில் சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி செய்தும், பிரயண்ட் பூங்கா, ரோஜாபூங்காவில் உள்ள வண்ண வண்ண மலர்களையும் அருவிகளில் சீராக கொட்டி வரும் நீரினை கண்டு ரசித்தும், பூங்கா புல்தரைகளில் அமர்ந்தும் ஏரிச்சாலையில் குதிரைசவாரி, நடைப்பயிற்சி செய்தும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.
தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் குவிந்து வரும் சுற்றுலாப் பயணிகளால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகின்றது, அதனை போக்குவரத்து போலீசாரும் சரி செய்து வருகின்றனர், கடந்த நான்கு நாட்களாக சுற்றுலாப்பயணிகள் தொடர் வருகை அதிகரிப்பால் சுற்றுலா தொழில் புரிவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்- ஜாபர்சாதிக் ( கொடைக்கானல்) இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.