Home /News /tamil-nadu /

நண்பர்களுடன் சேர்ந்து தந்தையை அடித்துக் கொன்ற மகன் - அம்பலமான நாடகம்..

நண்பர்களுடன் சேர்ந்து தந்தையை அடித்துக் கொன்ற மகன் - அம்பலமான நாடகம்..

Youtube Video

திண்டுக்கல் அருகே, தாயைக் கடத்தி வந்து திருமணம் செய்து கொடுமைப்படுத்தியதாக கருதிய மகன், தந்தையை மகன்களுடன் சேர்ந்து படுகொலை செய்துள்ளார். சடலத்தை அடையாளம் காட்டி விபத்து என நாடகமாடிய மகன் சிக்கியது எப்படி?

  ஜெரால்டு தங்கராஜ் தனது 31 வயதில் செய்த கடத்தல் காதல் திருமணம், அவரது வாழ்க்கையையே முடித்து விட்டது, தவறான புரிதலால் தந்தையை மகனே கொலை செய்தது எப்படி?

  திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராமம் செட்டியபட்டி ரெயில்வே கேட் அருகே கடந்த 18ம் தேதி தண்டவாளத்தில் உருக்குலைந்த நிலையில் ஓர் ஆண் சடலம் கிடந்தது.

  திண்டுக்கல் ரயில்வே போலீசார், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தபோது, சடலத்தின் அருகில், 2 உருட்டுக் கட்டைகளும் பீர் பாட்டில்களும் கிடந்தன. உருட்டுக் கட்டைகளில் ரத்தக் கறை இருந்தது. மேலும் அங்கு ஒரு இருசக்கர வாகனமும் நின்றிருந்தது.

  வாகனப் பதிவெண்ணை வைத்து விசாரித்ததில் இறந்து கிடந்தவர், வெள்ளோடு கோம்பை பகுதியைச் சேர்ந்த 47 வயதான ஜெரால்டு தங்கராஜ் என்பது தெரியவந்தது.

  தகவல் அறிந்த அவரது மகன் 21 வயதான ஜெரால்டு மற்றும் பாட்டி சம்பூர்ணம் இருவரும் உடலை அடையாளம் காட்டினர்.

  முதலில் கிஷோரிடம் விசாரித்தபோது அவர், தனது தந்தை குடிப்பழக்கம் கொண்டவர் என்பதால் யாரிடமாவது சண்டை போட்டு அதில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அல்லது ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் நாடகமாடினார்.

  போலீசார், ஜெரால்டு தங்கராஜின் செல்போனில் கடைசியாக வந்த அழைப்புகளை ஆய்வு செய்தபோது கிஷோரின் அழைப்பு சிக்கியது. அதன் அடிப்படையில் தீவிரமாக விசாரித்தபோது தான்தான் தனது நண்பர்களுடன் சேர்ந்து தந்தையைக் கொன்றதாக ஒப்புக் கொண்டார்.

  ஜெரால்டு தங்கராஜ் தனது இளமையில் அதே பகுதியைச் சேர்ந்த ரீட்டா என்ற பெண்ணைக் காதலித்தார். ஆனால் ரீட்டாவின் பெற்றோர் அவரை வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து கொடுத்தனர்; அந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. அதுதான் கிஷோர்.

  கிஷோருக்கு 5 வயதாக இருந்தபோது ரீட்டாவை குழந்தையுடன் கடத்தி வந்து திருமணம் செய்து கொண்டார் ஜெரால்டு தங்கராஜ், அப்போது அவருக்கு வயது 31

  ஜெரால்டு தங்கராஜ் ரீட்டா தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. தற்போது அந்த மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார். அதேநேரம் முதல் குழந்தையான கிஷோரை தனது மகன் போலவே வளர்த்து வந்துள்ளார் ஜெரால்டு தங்கராஜ்.

  பிளஸ் 2 வரை படித்த கிஷோர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிக்கு செல்லத் தொடங்கினார். சிறுசிறு வேலைகள் பார்த்து வந்த ஜெரால்டு தங்கராஜ், மதுபோதை, சேவல் சண்டை, சீட்டாட்டம் எனப் பொழுதைக் கழித்து வந்துள்ளார்.

  இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, ரீட்டா, ஊரில் உள்ள கிணறு ஒன்றில் தவறி விழுந்து இறந்து விட்டார். அந்த இறப்பிற்கு அரசுத் தரப்பில் இருந்து கிடைத்த ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயையும் ஜெரால்டு தங்கராஜ், குடித்தும் சீட்டாட்டம் ஆடியும் செலவழித்து விட்டார்.

  மேலும் கிஷோரிடம் இருந்தும் பணத்தைப் பறித்துக் கொள்ளும் வழக்கத்தையும் மேற்கொண்டிருந்தார். ஏற்கனவே தனது தாயை ஜெரால்டு கடத்தி வந்து திருமணம் செய்து கொண்டது கிஷோருக்குப் பிடிக்கவில்லை.

  இதனால் ஆத்திரமடைந்து தந்தையைக் கொல்ல, நண்பர்கள் ஆறுமுகப் பாண்டி மற்றும் ஆபீஸ் என்ற பிராங்க்ளின் ஆகியோருடன் சேர்ந்து திட்டம் போட்டார். அதன்படி 2 வாரங்களுக்கு முன்பு கோவையில் இருந்து சொந்த ஊருக்கு ரயிலில் திரும்பி வந்தார் கிஷோர். ரயில் நிலையத்தில் நிற்பதாகவும் வந்து அழைத்துச் செல்லும்படியும் தந்தை ஜெரால்டுக்கு தகவல் சொன்னார்.

  அதனை நம்பி ஜெரால்டு தங்கராஜ் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே மறைந்திருந்த கிஷோர் மற்றும் அவரது நண்பர்கள் உருட்டுக்கட்டை மற்றும் பீர் பாட்டிலால் அவரை தாக்கி கொன்று பின்னர் 20 அடி தூரத்தில் இருந்த தண்டவாளத்தில் உடலை வீசி சென்று விட்டனர்

  கொலை செய்து விட்டு எதுவும் தெரியாதது போல, மறுநாளே கோவைக்கு சென்று வேலைக்கு செல்லத் தொடங்கினார் கிஷோர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து கிஷோர், ஆறுமுகப் பாண்டி மற்றும் பிராங்க்ளின் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

   
  Published by:Esakki Raja
  First published:

  Tags: Crime | குற்றச் செய்திகள், Dindugal, Murder, News On Instagram

  அடுத்த செய்தி