மகனின் நடத்தை சரி இல்லாத காரணத்தினால், அப்பா,அம்மா,உடன்பிறந்த சகோதரர் உள்ளிட்ட குடும்பத்தினர் மனவளர்ச்சி பாதித்த நபரை கொன்று கொடைக்கானல் மலைச்சாலையின் ஓரத்தில் உடலை வீசி சென்றது விசாரணையில் அம்பலம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வத்தலகுண்டு பிரதான மலைச்சாலையில் கடந்த10-ஆம் தேதி வாழைகிரி கிராமம் அருகே சாலையின் ஓரத்தில் உள்ள வனப்பகுதியில் சடலம் கிடப்பதாக வனத்துறையினர் தாண்டிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் மோப்ப நாய் கொண்டு சோதனை மேற்கொண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் நேரில் ஆய்வு செய்தார்.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை சிசிடிவி காட்சிகள் மூலம் கேரளா மற்றும் வெளிமாவட்டங்களில் தீவிரமாக தேடி வந்தனர். இதனை தொடர்ந்து,கொடைக்கானல் வத்தலகுண்டு நுழைவாயில் சோதனை சாவடியில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்த போது (TN18F300) என்ற எண் உடைய சைலோ கார் கடந்த 6ஆம் தேதி இரவு நேரத்தில் கொடைக்கானல் வத்தலகுண்டு மலைச்சாலை நுழைவாயில் பகுதிக்குள் நுழைந்து கொடைக்கானல் செல்லாமல் பாதிவழியிலேயே 3 மணி நேரத்திற்கு பிறகு இதே சோதனை சாவடி பகுதிக்கு திரும்பியுள்ளது.
Also Read: லிப்ட் கொடுத்தது குற்றமா? - போதை ஆசாமியிடம் சிக்கிக்கொண்ட புரோட்டா மாஸ்டர்
இதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் கார் நம்பர் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தது என கண்டறிந்து ,தாண்டிக்குடி காவல் துறையினர் புதுக்கோட்டை காவல் துறையினரை தொடர்பு கொண்டு கார் நம்பரை கொடுத்து விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்,காரின் உரிமையாளர் ஜெகனை(34) புலன் விசாரணை செய்ததில் முன்னுக்கு பின்னாக பதிலளித்தும்,கொடைக்கானல் சென்று வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ஜெகன் தனது பெற்றோர் உதவியுடன் தனது அண்ணன் செல்லத்துரை காணவில்லை என புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் மீது சந்தேகம் அடைந்த தாண்டிக்குடி காவல் துறையினர் புதுக்கோட்டை விரைந்து ஜெகன் குடும்பத்தினரிடம் கிடுக்கு பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில் கொலை செய்யப்பட்டு இறந்தவர் செல்லத்துரை(37) என்பதும்,இவர் ஜெகனின் அண்ணன் என்பதும் தெரியவந்தது.
Also Read: நிர்வாணமாக காட்டும் மாயக்கண்ணாடி.. விபரீத ஆசையால் வில்லங்கத்தில் சிக்கிய கும்பல்
மேலும் இவருக்கு மனவளர்ச்சி பாதிக்கப்பட்டதாகவும், திருமணம் ஆகவில்லை என்றும்,தினந்தோறும் குடித்து விட்டு பெண்களை கேலி செய்வதும்,தொந்தரவு அளிப்பதும்,திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதும் வாடிக்கையாக வைத்துள்ளார், இதனையடுத்து கடந்த 1ஆம் தேதி கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்து சென்ற ஜெகனிடம் தாயார் ராஜம்மாள்(70) நமது குடும்ப கவுரவத்தை செல்லத்துரை கெடுத்துவருவதால் அவனை கொன்று விட்டு கொடைக்கானல் மலை பகுதிகளில் வீசி வருவதற்கு திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 6ஆம் தேதி செல்லத்துரைக்கு தாயார் மற்றும் தம்பி ஜெகன் 3 மது பாட்டில்கள் வாங்கி கொடுத்து குடிக்க வைத்து அதிக போதை ஏற்படுத்தியதில் சுயநினைவு இழந்தவுடன் தந்தை திவ்யாநாதன்(75) உதவியுடன் ஜெகன் வைத்திருந்த சைலோ காரில் ஏற்றி வந்து காரின் பின் இருக்கையின் உள்ளே வீல் ஸ்பானர் இரும்பு ராடின் மூலம் கழுத்து மற்றும் தலை பகுதியில் பலமாக அடித்து கொலை செய்து செல்லத்துரையின் இரண்டு கைகளை கட்டி கொடைக்கானல் வத்தலகுண்டு பிரதான மலைச்சாலையில் வாழைகிரி அருகே சாலையின் ஓரத்தில் உள்ள வனப்பகுதிக்குள் தள்ளிவிட்டு 3 பெரும் கற்களை செல்லத்துரை முகம் மற்றும் உடல் மீது வீசி சிதைத்து விட்டு அதே சைலோ காரில் புதுக்கோட்டை பகுதிக்கு திரும்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படையினர் புதுக்கோட்டை, திருமயம் பகுதியில் இருந்த அப்பா,அம்மா,உடன் பிறந்த சகோதரர் உள்ளிட்ட மூவரை கைது செய்து,கொலை செய்ய பயன்படுத்திய சைலோ கார்,வீல் ஸ்பானர் இரும்பு ராடு உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து,தாண்டிக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் இந்த கொலை சம்பவம் நடைபெற்று கடந்த ஒரு வாரத்திற்குள் குற்றவாளிகளை பிடித்த தனி படையினரை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடைக்கானலுக்கு வரும் நுழைவாயில் பகுதியில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கூடுதலாக காவலர்களை பணியில் அமர்த்தி பயணிகளின் வாகனங்களை சோதனை செய்து வருவதாகவும் மேலும் இது போன்று குற்றம் சம்பவங்களை தவிர்க்க கொடைக்கானல் வத்தலகுண்டு பிரதான மலைச்சாலை,பழனி மற்றும் அடுக்கம் மலைச்சாலைகளில் உயர்ரக சிசிடிவி கேமராக்கள் பொருத்தஉள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.