• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருட்டுப்பட்டம் கட்டியதால் மனஉளைச்சலில் இளைஞர் தற்கொலை - வீண்பழி சுமத்தியது விசாரணையில் அம்பலம்

திருட்டுப்பட்டம் கட்டியதால் மனஉளைச்சலில் இளைஞர் தற்கொலை - வீண்பழி சுமத்தியது விசாரணையில் அம்பலம்

கொடைக்கானல் இளைஞர் தற்கொலை

கொடைக்கானல் இளைஞர் தற்கொலை

திருட்டுப்பட்டம் கட்டியதால் மன உளைச்சல் ஏற்பட்ட பிரபாகரன் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துக்கொண்டார்.

  • Share this:
    கொடைக்கானல் கும்பூர் கிராமத்தில் 18 வயதான  இளைஞர்  திருடியதாக குற்றம் சாட்டியதால் விஷம் அருந்தி  தற்கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மன்னவனூர் ஊராட்சிக்கு உட்பட்ட  கும்பூர் கிராமத்தை சேர்ந்த  முருகன் என்பவரின் மகன் பிரபாகரன்( வயது 18)  படித்து முடித்து விட்டு தோட்ட வேலைகளுக்கு சென்றும் வீட்டு மாடுகளையும் பராமரித்து வருகிறார். மேலும் இந்த கிராமங்களை சுற்றி மாடுகளை மேய்த்து வருவதையும் இவ‌ர் வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் க‌ட‌ந்த‌ 17-ம் தேதி இதே கிராமத்தில் கந்தசாமி என்பவரின் தோட்டத்தில் பிரபாகரன் மாடுகளை மேய்ச்சலுக்கு விட சென்றுள்ளார்

    அப்போது தோட்டத்தின் உரிமையாளர் உள்ளிட்ட 6 நபர்கள் பிரபாகரனை தோட்ட வீட்டில் வைத்திருந்த லேப்டாப் ,செல்போன் உள்ளிட்ட பொருட்கள் காணவில்லை, நீ தான் திருடி இருக்க வேண்டும் என சந்தேகப்பட்டு மிரட்டியதாகவும் ,பிரபாகரன் நான் எடுக்கவில்லை என்றும் எனக்கு எதுவும் தெரியாது என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து தோட்டத்தில் இருந்த 6 நபர்கள் பிரபாகரனை தாக்கியதாகவும் ,நீ ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும் என்றும் ஆபாச வார்த்தைகளால் திட்டி,இல்லை என்றால்  உன் குடும்பத்தை அசிங்கப்படுத்தி உன்னை கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளனர்.இதனை  பிரபாகரன் த‌ன‌து  தாயாரிடம் கூறி புலம்பியதாகவும்  கூறப்படுகிறது.

    இதனைத்தொடர்ந்து மன உளைச்சல் ஏற்பட்ட பிரபாகரன் அவமானம் தாங்க முடியாமல்  கடந்த 18ஆம் தேதி  அதிகாலை 3 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும் மீண்டும் காலை 5 மணிக்கு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வாந்தி எடுத்து மயங்கியுள்ளார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் பிரபாகரனை உடனடியாக  அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தான் விஷம் அருந்தியதாக பிரபாகரன் தெரிவித்த நிலையிலேயே அவர் இறந்து விட்டதாக குடும்பத்தினரால் கூறப்படுகிறது.

    இதனையடுத்து பிரபாகரன் குடும்பத்தினர் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர்  உடற்கூறு ஆய்விற்காக பிரபாகரனின் சடலத்தினை கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். புகாரின் அடிப்படையில்  காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வ‌ந்த‌  நிலையில் பிரபாகரனின் உறவினர்கள் தற்கொலைக்கு காரணமாக இருந்த கும்பூர் கிராமத்தை சேர்ந்த  6 நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அரசு மருத்துவமனையின் அருகில் உள்ள பிரதான வத்தலக்குண்டு சாலையில் கடந்த 19ஆம் தேதி அன்று  பிற்பகல் வேளையில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது,தகவல் அறிந்த வந்த காவல் துறையினர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்ய  நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கை விடப்பட்டது. இதனை தொடர்ந்து காவல் துறையினர் பிரபாகரனை  தற்கொலைக்கு தூண்டியதாக கும்பூர் கிராமத்தை சேர்ந்தசெல்வம்(43),பழனியப்பன்(47),ராமர்(53) உள்ளிட்ட மூன்று நபர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் இளைஞரை பழி  சுமத்தி  தற்கொலைக்கு  தூண்டியது அம்பலமானதால் இந்த மூன்று நபர்களின் மீது 294(b),323,506(i),306 IPC உள்ளிட்ட நான்கு வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், இந்த‌ வ‌ழ‌க்கின் முக்கிய குற்றவாளிகளில்  ஒருவ‌ரான‌ கும்பூர் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி(35) என்ற நபரை காவல்துறையினர் ஒரு வார காலமாக தேடி வந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஊட்டி பகுதியில் தனிபடையினர் கைது செய்து கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து இன்று வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இளைஞர் இறந்த வழக்கில் தொட‌ர்புடைய‌ மேலும் 2 நபர்களை காவ‌ல்துறையினர் தேடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

     செய்தியாள‌ர்: ஜாப‌ர்சாதிக் (கொடைக்கான‌ல்)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: