மற்ற நகரங்களைப் போலவே திண்டுக்கல்லிலும் மளிகைப் பொருட்களை டோர் டெலிவரி செய்யவும், வாகனங்களில் கொண்டு சென்று நேரடியாக விற்கவும் மாநகராட்சியில் டோக்கன் பெற வேண்டும். அப்படி அனுமதி பெறாத கடைக்காரர்கள்தான் அதிகாலை 3 மணிக்கு கடையைத் திறந்து வியாபாரம் செய்திருக்கிறார்கள். திண்டுக்கல்லில் காய்கறி மார்க்கெட் அதிகாலை 2 மணிக்கு செயல்படத் தொடங்கும். அந்த நேரம் வியாபாரிகள் அதிகமாக வருவார்கள். ஊரடங்கை கண்காணிக்கும் அதிகாரிகளும் இருக்க மாட்டார்கள்.
இதை பயன்படுத்தி திண்டுக்கல் முழுவதும் பலசரக்கு, மிட்டாய் மற்றும் பிளாஸ்டிக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை ஜோராக நடந்தது. சீனி, துவரம் பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களுடன் மிட்டாய், பிஸ்கட் பாக்கெட், பிளாஸ்டிக் பொருட்கள் என கிடைத்ததையெல்லாம் அள்ளிப்போட்டு வாங்கிச் சென்றனர் வியாபாரிகள்.
காலை 3 மணி வரை பல வீதிகளில் வியாபாரம் களை கட்டியது. அதற்கு பின் அதிகாரிகள் வரக் கூடும் என்பதால் உரிமையாளர்கள் கடைகளை பூட்டிவிட்டுச் சென்றனர். பெரிய அளவில் கூட்டம் இல்லாத நிலையிலும், வியாபாரிகள் பலர் முகக்கவசம் அணியாமல் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். கடைகள் மூடப்பட்டு பொருட்கள் கிடைப்பதே குதிரைக் கொம்பாக உள்ளதால் பல கடைகளில் அதிகபட்ச சில்லறையை விட கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்கப்பட்டன.
வாங்க வாடிக்கையாளர்கள் தயாராக இருப்பதால் வியாபாரிகளும் விலையைப் பற்றி கவலைப்படாமல் வாங்கிச் சென்றனர். ஊரடங்கு காலத்தில் தட்டுப்பாடின்றி பொருட்கள் கிடைக்கும் என்பதை நினைத்து மகிழ்ச்சியடைவதா... அல்லது இப்படி விதிகளை கடைபிடிக்காமல் கூடி விற்பதால் கொரோனா பரவல் அதிகரிக்குமே என்பதை நினைத்து வருத்தப்படுவதா என தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் திண்டுக்கல் மக்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.