திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில், சுமார் 1 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான மா விவசாயம் பாதித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் சேலத்திற்கு அடுத்தபடியாக திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் தான், 10,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. செந்தூரம், மல்கோவா, காதர், அல்போன்சா மற்றும் பங்கனப்பள்ளி உள்ளிட்ட பல வகை மாம்பழங்கள், தரமுடனும், நல்ல சுவையுடனும் இங்கு விளைவிக்கப்பட்டு வெளிநாடுகள் வரையிலும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில் நத்தம் பகுதிகளில் இந்த வருடம் நல்ல மழை பெய்ததால், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மாமரங்களில் பூக்கள் அதிகளவில் பூத்துக் குலுங்கின. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாகவே வேளாண்துறை அதிகாரிகள், இப்பகுதிகளில் உள்ள மா தோட்டங்களுக்கு சென்று விவசாயிகளுக்கு தேவையான சரியான ஆலோசனைகளை வழங்கவில்லை என்றும் தாங்களாகவே சில மருந்துகளை அடித்ததில், பூக்கள் உதிர்ந்து விளைச்சல் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Also read... மதுரையில் விஷவாயு தாக்கி மூவர் உயிரிழப்பு - விசாரணை நடைபெறுவதாக அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
வழக்கமாக இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் மாங்காய்கள், நத்தம், மற்றும் சாணார்பட்டியில் உள்ள குடோன்களுக்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்வது வழக்கம். ஆனால், இம்முறை போதிய விளைச்சல் இல்லாததால், வியாபரிகளே தோட்டத்திற்கு வந்து மாங்கனிகளை பறித்து செல்கின்றனர்.
அதேசமயம், விவசாயிகள் ஆலோசனை பெற தங்களை அணுகுவதில்லை எனவும், பரிந்துரைப்பதை காட்டிலும் அதிகப்படியான மருந்து தெளிக்கப்படுதாகவும், தோட்டக்கலை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
-செய்தியாளர்: சங்கர். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.