கொடைக்கானல் வைட்ரா காம்பவுண்டில் சுமார் 25 சென்ட் நிலத்திற்கு ஆள்மாறாட்டம் மற்றும் போலியாக பத்திரம் பதிவு செய்த விவகாரத்தில் பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய குடியிருப்பு பகுதிகளில் ஒன்றாக அப்சர்வெட்டரி வைட்ரா காம்பவுண்டு உள்ளது,இந்த பகுதியில் ராஜலட்சுமி என்பவருக்கு சுமார் 25 சென்ட் நிலம் சொந்தமாக உள்ளது. இந்நிலையில் 6 நபர்கள் கொண்ட குழு கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வருகைபுரிந்து ராஜலட்சுமி என்பவரின் இடத்தினை விற்பனை செய்ய வந்துள்ளது. இந்த பத்திரப்பதிவில் ராஜலட்சுமி கடந்த 2000 ஆம் ஆண்டு இறந்து விட்டதாகவும். இந்த இடம் அவரது வாரிசு தாரரான சந்தான லட்சுமி என்பவருக்கு உரியது என்றும் இதில் வாரிசு சான்றிதழ் மற்றும் ராஜலட்சுமி இறப்பு சான்றிதழ் இணைக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த இடம் காயல் பட்டிணத்தை சேர்ந்த முகமது அப்துல் காதருக்கு பத்திரப் பதிவு செய்ய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து பத்திரம் பதிவு செய்த பின்னர் அவர்கள் கொடுத்த பத்திரத்தில் இருந்த அலுவலக முத்திரை,அலுவலர் கையொப்பம் சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்தது. இதையடுத்து அலுவலகத்தில் இருந்த இந்த பழைய பத்திரத்தின் கோப்புகளை துரிதமாக பரிசீலித்த போது அசல் ஆவண பதிவில் (காப்பி) என குறிப்பிட்டு இருக்கும் ஆனால் இந்த கும்பல் கொடுத்த பத்திரத்தில் இந்த விவரங்கள் குறிப்பிட பெறாமல் இருந்ததால் இது போலி பத்திரம் எனவும்,ஆள்மாறாட்டம் செய்ததும் சார்பதிவாளர் ராஜேஷால் கண்டறியப்பட்டு,கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகார் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தினை விற்க முயன்ற சந்தான லட்சுமி என்று ஆள்மாறாட்டம் செய்த சென்னையை சேர்ந்த லதா மற்றும் நிலம் வாங்கும் நபருக்கு உடந்தையாக இருந்த மதுரை திருமங்கலத்தை சேர்ந்த முகேஷ் மற்றும் அவருடன் வந்த ஓட்டுநர் அத்திகூர் ரகுமான் ஆகியோரிடம் விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். அதனை தொடர்ந்து கிடுக்கு பிடியாக விசாரணை செய்ததில் தாங்கள் போலியாக பத்திர பதிவு செய்து ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புகொண்டதையடுத்து அவர்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த இடத்திற்கு போலியாக ஆவணம் தயாரித்து விற்க முயன்றவர் சென்னையை சேர்ந்த சுடலை(வழக்கறிஞர் என்று உடன் வந்தவர்களால் கூறப்படுகிறது) மற்றும் இடத்தினை வாங்க வந்த முகமது அப்துல் காதர் மற்றும் உடன் வந்த சாட்சிகளை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல் துறையினர் தேடி வருகின்றனர். கொடைக்கானலில் இது போன்று ஆள்மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு செய்த சம்பவம் மூன்றாது முறையாக நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்- ஜாபர்சாதிக் (கொடைக்கானல்)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.