நியூஸ் 18 செய்தி எதிரொலி: மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு குவியும் நிதியுதவி!

சுதா

போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் மாற்றுத்திறனாளியான சுதாவிற்கு மருத்துவ செலவு செய்வதற்கோ சத்தான உணவு வாங்கி கொடுப்பதற்கு கூட காளியப்பனால் செலவு செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது

  • Share this:
    திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுதா 25 வயதில் 2 வயது குழந்தைபோல் இருப்பது தொடர்பாக  நியூஸ் 18ல் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில் மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு நிவாரணம்  வழங்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் புளியராஜக்காபட்டி பெரியார் நகரை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி மகாலட்சுமி. காளியப்பன் கொய்யா பழம் வியாபாரம் செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் உள்ளனர்.  இவரது மகள் சுதா பிறக்கும்போதே   உடல் வளர்ச்சி இன்றியும் மன வளர்ச்சி குன்றியும் பிறந்துள்ளது. தற்போது சுதாவுக்கு 25 வயது ஆகிறது. ஆனால் பார்ப்பதற்கு குழந்தைபோலவே தோற்றம் அளிக்கிறார். சுதாவால்  நடக்க முடியாது, வெகுநேரம் உட்கார்ந்து இருக்க முடியாது, வாய் பேச வராது, காது கேட்காது.  24 மணி நேரமும்  அவரை கண்காணிப்பதற்காக அருகே ஒருவர் இருந்தாக வேண்டிய கட்டாய சூழ்நிலை உள்ளது.

    இந்நிலையில் கடந்த 16 வருடங்களுக்கு முன்பு மகாலட்சுமி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் .மேலும் காளியப்பன் தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தார். இதனால் குழந்தை சுதாவை பார்த்துக்கொள்ள வீட்டில் வேறு யாரும் இல்லாத காரணத்தினால் தான் பார்த்து வந்த கொய்யாப்பழம் விற்பனை செய்யும் தொழிலையும் விட்டுவிட்டு காளியப்பன், சுதாவுடனேயே   24 மணி நேரமும் இருந்து வருகிறார்.

    இவரது மகன் கார்த்தி மணி பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். குடும்பத்திற்கு வருமானம் தேவைப்படுகின்ற காரணத்தினால் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு தற்பொழுது கூலி வேலைக்கு சென்று வருகிறார். தனது மகன் கார்த்தி மணியின் வருமானம்,  சுதாவிற்கு அரசாங்கம் வழங்கக்கூடிய மாற்றுத்திறனாளிக்கான மாதத்தொகை ரூ ஆயிரத்தை வைத்து குடும்பத்தை ஓட்டி வருகிறார் காளியப்பன்.



    போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் சுதாவிற்கு மருத்துவ செலவு செய்வதற்கோ சத்தான உணவு வாங்கி கொடுப்பதற்கு கூட காளியப்பனால் செலவு செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது.தற்பொழுது குடும்பத்தை நடத்துவதற்கு போதிய வருமானம் இல்லாமல் காளியப்பன் தவித்து வருகிறார்.

    இதையும் படிங்க: பள்ளி கழிவறையை தூய்மை செய்யும் தலைமையாசிரியர்..!


    இந்நிலையில் இதுதொடர்பாக  நியூஸ் 18  ஊடகத்தில்  செய்தி  ஒளிபரப்பானது. இதனை பார்த்த மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளி சுதாவிற்கு நிவாரண தொகையை  ரூ 1000ல் இருந்து 1500 ஆக உயர்த்தி வழங்கியுள்ளது. மேலும்  ஈரோட்டை சேர்ந்த  தாய்மை அறக்கட்டளை சார்பாக பாதிக்கப்பட்ட பெண் சுதாவிற்கு 15 ஆயிரத்து 500 ரூபாய் மொத்தமாக வழங்கியுள்ளனர். மேலும் மாதம் மாதம் ரூ 2000 வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Murugesh M
    First published: