Home /News /tamil-nadu /

திண்டுக்கல் கரடிக்குட்டு மலையில் இயங்கும் கல்குவாரியால் அவதிப்படும் கிராம மக்கள்

திண்டுக்கல் கரடிக்குட்டு மலையில் இயங்கும் கல்குவாரியால் அவதிப்படும் கிராம மக்கள்

Youtube Video

திண்டுக்கலில் கல்குவாரியில் வெடிவைப்பதால் கிராம மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம் கரடிக்குட்டு மலையில் இயங்கி வரும் கல் குவாரியால் சுற்றுவட்டார கிராமத்தில் வீடுகள் சேதமடைந்து இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், தூக்கத்தை இழந்து தவித்து வரும் மக்கள் உடனடியாக குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கரடிக்குட்டு மலை அமைந்துள்ளது. கரடிகள் தங்கும் மலையாக இருந்ததால் கரடிக்குட்டு என்று அழைக்கப்பட்டு வரும் இந்த மலை தற்போது கல் குவாரி என்ற பெயரில் சிதைத்து சின்னா பின்னமாக்கப்பட்டு வருகிறது.

    எழில் கொஞ்சும் பசுமை நிறைந்த கரடிக்குட்டு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள செங்குளம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்கள் மா, கொய்யா, புளி, தென்னை உள்ளிட்டவற்றை பிரதான விவசாயமாக செய்து வருகின்றனர். இந்நிலையில், கரடிக்குட்டு மலையில் கல் குவாரி அமைக்க கனிமவளத்துறை சார்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அனுமதி வழங்கப்பட்டது.

    அப்போது, குவாரியில் கற்களை வெட்டி எடுக்கும் பணி நடைபெற்றதால் இந்த பகுதியில் விவசாயம் பாதிக்கப்படாமல் இருந்தது. ஆனால், தற்போது சக்தி வாய்ந்த வெடி பொருட்களை பயன்படுத்தி உடைக்கப்படுவதால் இங்குள்ள வீடுகள் அதிர்வதுடன் விரிசலும் ஏற்படுகிறது.

    இரவு- பகல் பாராமல் என்னேரமும் வெடி வைக்கப்படுவதால் குழந்தைகள், முதியவர்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.  இப்பகுதியில் விளையக்கூடிய மா, புளி, தென்னை, கொய்யா மரங்களின் மீது ரசாயன வெடிப்பொருட்கள் கலந்த பாறைத்துகள் படிவதால் சாகுபடி பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

    இதுதொடர்பாக கனிமவளத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, கல் குவாரி அனுமதி பெற்றே இயங்கி வருவதாக கூறனர். கரடிக்குட்டு கல் குவாரியில் வெடி பொருட்களை பயன்படுத்த தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Dindigul

    அடுத்த செய்தி