திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவை சேர்ந்தவர் அன்புச் செழியன் பெரியகுளம் சாலையில் நட்சத்திர ஹோட்டல் நடத்தி வந்தார் இந்நிலையில் கடந்த சில வருடங்களாக அன்புச்செழியனுக்கும் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் ஹோட்டல் சொத்து தொடர்பாக பிரச்சினை தொடர்ந்து இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வத்தலக்குண்டு புறவழிச்சாலையில் நேற்று நடைபயிற்சி மேற்கொண்டிருந்த அன்புச்செழியனை மர்ம கும்பல் கடத்தி சென்று விட்டதாக வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் புறவழிச்சாலையில் சோதனையிட்ட போலீசார் அன்புச்செழியனின் ஒரு செருப்பு மட்டும் கிடப்பதை கண்டு கடத்தலை உறுதி செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக டி.எஸ்.பி சுகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடத்தல் கும்பலை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
Also Read: மூதாட்டி கொலை வழக்கில் போலீசுக்கு தண்ணீ காட்டிய நபர்.. ஜாமீன் கிடைத்தும் சிறைவாசம்.. கைது செய்த போலீஸ்
விசாரணையில் மதுரை காரியாபட்டியில் உள்ள ஒரு வீட்டில் அன்புச்செழியன் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது வீட்டிற்குள் அதிரடியாக புகுந்த போலீசார் அன்புச்செழியன் பத்திரமாக மீட்டனர் நடைபயிற்சி மேற்கொண்ட அன்புச்செழியனை மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் காரில் கடத்தி வந்து அடைத்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது போலீசாரை கண்டதும் தப்பியோடிய கடத்தல் கும்பலை தனிப்படை போலீசார் விரட்டி பிடித்தனர்.
கடத்தலில் தொடர்புடைய வத்தலக்குண்டு வை சேர்ந்த ஒப்பந்ததாரர் வெள்ளைச்சாமி மற்றும் சிவா, விருதுநகரைச் சேர்ந்த பிரபாகரன், விஜய், பேரையூர் வடிவேல், திருப்புவனம் மணி ஆகியோரை பிடித்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட 7 பேரிடமும் கடத்தலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர் தீவிர விசாரணையில் வெள்ளைச்சாமிக்கும் அன்புச்செழியனுக்கும் ஏற்பட்ட தகராறில் அன்புச்செழியன் கடத்தப்பட்டதாக தெரியவந்தது.
Also Read: கஞ்சா கடத்தல் கும்பலோடு பிரியாணி விருந்து.. சொகுசு ஹோட்டலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் - சர்ச்சையை ஏற்படுத்திய போட்டோ
இதனை அடுத்து கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய வெள்ளைச்சாமி உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர் கடத்தப்பட்ட 3 மணி நேரத்தில் ஹோட்டல் அதிபரை உயிருடன் மீட்ட தனிப்படை போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது கடந்த 10 தினங்களாக ஹோட்டல் அதிபர் அன்பு செழியனை கடத்தி செல்ல திட்டமிட்டு வத்தலகுண்டு நகரில் தனியார் விடுதியில் கடத்தல் கும்பல் தங்கியுள்ளது. இந்நிலையில் ஹோட்டல் அதிபர் நேற்று நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது காரில் 7 பேர் கொண்ட கும்பல் அவரை கடத்தி சென்றுள்ளது.
ஓட்டல் அதிபர் மகன் கொடுத்த புகாரின் பேரில் வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து சார்பு ஆய்வாளர் தயாநிதி தலைமையில் தனிப்படை போலீஸார் ஹோட்டல் அதிபரை கடத்திய நபர்களை சிசிடிவி காட்சிகள் கொண்டும், ஓட்டல் அதிபர் அன்புச்செழியன் செல்போன் டவரை வைத்து குற்றவாளிகளை கண்டுபிடித்தனர்.
மதுரை அருகே காரியாபட்டி பகுதியில் குற்றவாளிகள் இருப்பதாக தகவல் வந்ததையடுத்து அங்கு விரைந்த சார்பு ஆய்வாளர் தயாநிதி டீம் கடத்திய ஏழு பேர் கொண்ட கும்பலை கைது செய்து வத்தலகுண்டு அழைத்து வந்தனர். கடத்தல் கும்பலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
செய்தியாளர்: சங்கர் (திண்டுக்கல்) இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.