பூட்டுக்கும் பிரியாணிக்கும் புகழ் பெற்ற
திண்டுக்கல் மாவட்டம் தற்போது தலையைத் துண்டித்து செய்யும் படுகொலைகளாலும் லைம் லைட்டில் இடம் பெற்று வருகிறது. பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த நபர், தலையைத் துண்டித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் அடுத்துள்ள அனுமந்தராயன் கோட்டையைச் சேர்ந்தவர் 41 வயதான ஸ்டீபன். மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்; ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்.
பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக இவர் மீது ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் புதன்கிழமை இரவு, அனுமந்தராயன்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார் ஸ்டீபன். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி தலையைத் துண்டித்து எடுத்துக் கொண்டு சென்றது.
ஒரு கிலோமீட்டர் துாரம் தள்ளி, அனுமந்தராயன்கோட்டை உள்ளே செல்லும் தெருவில் தலையை வீசி விட்டு அந்தக் கும்பல் தப்பியோடியது. கொலைக்கான காரணம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய நிர்மலா தேவி என்ற பெண், புதன்கிழமை அன்று தலையைத் துண்டித்துப் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள் அதே பாணியில் மற்றொரு கொலை நடந்துள்ளது. போலீசாருக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 மாதங்களில் மட்டும் பல கொலை முயற்சித் தாக்குதல்கள், தொடர் திருட்டுகள் என திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
ஆகஸ்ட் மாதத்தில் புதிய எஸ்பியாக சீனிவாசன் பொறுப்பேற்ற உடன் ஒரே மாதத்தில் 24 நபர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த பின்பும் கொலைகளும் கொலை முயற்சித் தாக்குதல்களும் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.