அரசுக் கார், பயணப் படி என எந்த சலுகையும் வேண்டாம்...! வியப்பை ஏற்படுத்திய அதிமுக ஒன்றியக்குழுத் தலைவர்

”கடந்த 1972-ம் ஆண்டில் இருந்து கட்சியின் பல்வேறு பொறுப்புகள், 4 முறை ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்தாலும், முதன்முறையாக ஒன்றியக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்”

அரசுக் கார், பயணப் படி என எந்த சலுகையும் வேண்டாம்...! வியப்பை ஏற்படுத்திய அதிமுக ஒன்றியக்குழுத் தலைவர்
ராதா கிருஷ்ணன்
  • News18
  • Last Updated: January 19, 2020, 4:48 PM IST
  • Share this:
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பல லட்சம் ரூபாய் செலவு செய்து வெற்றி பெறும் அரசியல்வாதிகளின் மத்தியில் எதிர்கட்சி உறுப்பினர் ஆதரவோடு வெற்றி பெற்ற ஒன்றியக்குழுத் தலைவர் ஒருவர் வெளிப்படையான நிர்வாகம், அரசு சலுகைகள் எதுவும் வேண்டாம் என்று அரசுக்கு மனு அளித்திருப்பது அரசியல்வாதிகள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சி என்பது மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை தாங்களே தீர்மானித்து நிறைவேற்றிக் கொள்வதற்கு அதிகாரம் அளித்துள்ளது. தமிழ்நாடு உள்ளாட்சி சட்டத்தின் படி மூன்றடுக்காக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், வட்டார அளவில் செயல்படும் ஊராட்சி ஒன்றியங்கள் அதன் கீழ் உள்ள கிராம ஊராட்சிகளே கிராமப்புற மக்கள் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது.

மக்களிடம் நேரிடையாக தொடர்பில் உள்ள உள்ளாட்சி பதவிகளில், கிராம, ஒன்றிய அளவில் தங்களது பலத்தை நிலைநிறுத்த அரசியல் கட்சியினர் களம் இறங்கினாலும், செல்வாக்கு, கவுரத்தை காட்டவும் சுயேட்சைகளும் களம் இறங்குவது வழக்கம்.


நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் ஒரு லட்சம் வாக்காளர்கள் ஓட்டளித்து 16 ஒன்றியக் கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் அ.தி.மு.க 9, தி.மு.க 6, இ.கம்யூ 1 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது.

கடந்த 2 ம் தேதி நடந்த மறைமுகத் தேர்தலில் ஒரு தி.மு.க. உறுப்பினர் ஆதரவோடு 10 ஓட்டுக்கள் பெற்று அ.தி.மு.க. கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் ஒன்றியக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஒன்றியக் குழுத் தலைவராக இவர் வெற்றிப் பெற்றவுடன், நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். மனுவில், ஒன்றியக்குழுத் தலைவருக்கு அரசால் வழங்கப்படும் வாகனம், அதற்குரிய எரிபொருள் செலவு, தனது வீட்டிற்கு வழங்கப்படும் தொலைபேசி இணைப்பு மற்றும் பிற எவ்வித சலுகையும் தேவையில்லை என்று எழுதி கொடுத்துள்ளார்.மேலும் பயணப்படி, அமர்வுபடி தொகையை, திட்டச்சேரியில் இயங்கும் மனவளர்ச்சி குன்றியோர் பாதுகாப்பு மையத்திற்கு நேரிடையாக வழங்கிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ராதாகிருஷ்ணனுக்கு திருமணமான ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். மனைவியும் அரசு ஊழியர் ஆவார்.

கடந்த 1972-ம் ஆண்டில் இருந்து கட்சியின் பல்வேறு பொறுப்புகள், 4 முறை ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்தாலும், முதன்முறையாக ஒன்றியக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு என்மீது அன்பும், நம்பிக்கையும் வைத்துள்ள மக்களுக்கு சேவையாற்ற, கட்சி தலைமை நல்ல வாய்ப்பை அளித்துள்ளதாக கூறியுள்ள அவர், வெளிப்படையான நிர்வாகம், ஒன்றியத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு கடைகோடி மக்களுக்கும் சேவை செய்வேன் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
First published: January 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்