இ-பாஸ் உடன் செங்கல்பட்டு சென்றாரா ரஜினிகாந்த்? இன்னும் தொடரும் சர்ச்சை

Youtube Video

சென்ற ஆண்டு ஊரடங்கின் போது சென்னையிலிருந்து செங்கல்பட்டு சென்ற நடிகர் ரஜினிகாந்த் இ பாஸ் பெற்றுச் சென்றாரா என்ற கேள்விக்கு இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை. செங்கல்ப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளாதது ஏன்?

  • Share this:
    இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார்.. வசூல் மன்னன்.. ரஜினிகாந்தின் ஒவ்வொரு நகர்வும் செய்திதான்.. கடந்த ஆண்டு ஊரடங்கின் போது செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு ரஜினிகாந்த் தனது காரில் சென்ற புகைப்படம் வைரலானது. கடும் கட்டுப்பாடுகள் அமலில் இருந்த ஊரடங்கு நேரத்தில் ரஜினிகாந்த இ-பாஸ் இன்றி எப்படி மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றார்? ரஜினிகாந்த் இ-பாஸ் எடுத்திருந்தாரா? உண்மைதானா? என பலரும் கேள்வி எழுப்பினர். சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி தரப்பில் இ-பாஸ் நகல் வெளியிடப்பட்டது. ஆனால், இந்த விவகாரம் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு செங்கபட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒரு ஆண்டு ஆகியும் எந்த பதிலையும் தரவில்லை.

    ஆனால், அரசு அமைப்புகள் கொடுத்த ஆவணங்களுக்கும், ரஜினி தரப்பில் சொல்லப்பட்ட தரவுகளுக்கும் இடையே பல்வேறு முரண்கள் இருப்பது அம்பலமாகி இருக்கிறது. செங்கல்பட்டு காவல்து றை அளித்த பதிலில், 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி மகாபலிபுரம் நாவலூர் சோதனை சாவடியில் ரஜினிகாந்த் காரில் வந்ததாக தாழம்பூர் காவல் ஆய்வாளர் கூறியுள்ளார். அவரது காரை ஆய்வு செய்ததில் முன்பக்க கண்ணாடியில் அரசால் அனுமதிக்கப்பட்ட இ-பாஸ் ஒட்டப்பட்டிருந்தாக போலீசார் விளக்கமளித்திருக்கின்றனர்

    அதே நேரம் அவரது ஓட்டுநர் சீட் பெல்ட் அணியாததால், அபராதம் விதிக்கப்பட்டதாக தாழம்பூர் போலீசார் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொடுத்த ஆவணம் தெரிவிக்கிறது. ஆனால், ரஜினி அந்த காரில் பயணிக்கவில்லை என்று இது குறித்து பேட்டியளித்த அப்போதைய மாமல்லபுரம் கூடுதல் எஸ்.பி, அந்த காரில் ரஜினியே பயணிக்கவில்லை என்று சொல்லியிருந்தார்.

    மறுபுறம், சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்த ஓட்டுநர் பெயர், அவரது ஓட்டுநர் உரிமம் குறித்த விபரங்கள் சலானில் ஏன் பதியப்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. உரிய இ-பாஸ் வாங்கித்தான் ரஜினி பயணம் செய்தார் என்று சொன்ன செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அப்போது ஒரு இ-பாஸ் நகலை வெளியிட்டது.

    அதில் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் தேதி ரஜினி பயணம் செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், செங்கல்பட்டு போலீசார் கொடுத்துள்ள ஆவணங்களில் அவர் பயணித்தது ஜூன் மாதம் 26 ஆம் தேதி எனக் கூறப்பட்டிருக்கிறது. இப்படி ஏகப்பட்ட குளறுபடிகள் தொடரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடர்ந்து மவுனம் காப்பது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க...பதவி மீது என்றுமே எனக்கு ஆசை இல்லை: சசிகலா

    அந்த சமயத்தில் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் , சென்னை மாநகராட்சி தரப்பில் எந்த இ-பாஸும் வழங்கப்படவில்லை என ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அப்படியென்றால், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து சென்னை திரும்பியபோதும் இ-பாஸ் இல்லாமலேயே சூப்பர் ஸ்டார் பயணித்தாரா? என்ற கேள்விக்கும் இன்னும் பதில் இல்லை.

    முதல் ஊரடங்கின் போது இ-பாஸுக்கு மக்கள் சிரமப்பட்ட நிலையில், வி.ஐ.பிக்கள் இ-பாஸ் இன்றி பயணிக்க அனுமதிக்கப்பட்டார்களோ என்ற சந்தேகம் வலுக்கிறது. சென்னை மாநகராட்சி மற்றும் செங்கல்பட்டு ஆட்சியரகம் இது குறித்து உரிய விளக்கத்தை அளிக்க முன்வருவார்களா?
    Published by:Vaijayanthi S
    First published: