தருமபுரி அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் 500-க்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து, பசுஞ்சோலையாக மாற்றி இருக்கிறார்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்.
தனியார் பள்ளிக்கு நிகராக, தர்மபுரி மாவட்டம் பாலவாடி அரசுப்பள்ளியை, சுகாதாரத்தோடும், அழகாகவும் உருவாக்கி இருக்கிறார்கள் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும்.
பாலவாடி அரசு உயர்நிலைப் பள்ளி சுமார் நாலரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் இந்தப் பள்ளியில், ஒன்பது ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளியாக இந்தப் பள்ளி சாதித்து வருகிறது. படிப்பில் சாதனை படைத்து வரும் மாணவர்கள், இயற்கையை பேணிக்காப்பதிலும் கவனம் செலுத்தி, அதிலும், சாதனை படைத்துள்ளனர். பள்ளியைச் சுற்றி சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் ஏராளமான மரங்களும், செடிகளும் வளர்க்கப்பட்டு, பசுமை போர்த்திய வளாகமாக பள்ளியை மாற்றி இருக்கிறார்கள் மாணவர்கள். அரச மரம், ஆல மரம், வேப்பமரம், தேக்கு, மலைவேம்பு உள்ளிட்ட 500-க்கும் அதிகமான மரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர்.
பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பிறந்த நாட்களில், அவர்கள் சார்பில் ஒரு மரக்கன்று இந்தப் பள்ளியில் நடப்பட்டு வருவதாகக் கூறிய மாணவர்கள், வறட்சியில் மரங்கள் கருகுவதால், வீடுகளில் இருந்தும், தண்ணீர் விலைக்கு வாங்கியும் ஊற்றி, மரங்களை பராமரித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் உள்ள இரண்டு ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் வற்றிப்போய் உள்ளதால் அதை ஆழப்படுத்தி, தண்ணீர் ஆதாரத்தை உருவாக்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.
100 சதவீதம் தேர்ச்சியை தரும் ஆசிரியர்கள், மாணவர்களின் தனித்திறமைகளை வளர்ப்பதும், வரவேற்கத்தக்கது என்று பாலவாடி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியால், தென்னை மரங்கள் காய்ந்து வரும் நிலையில், பாலவாடி பள்ளியில் ஒரு மரம் கூட கருகாமல் பசுமை நிறைந்த வனமாகவே பராமரிக்கப்பட்டு வருகின்றன.
Published by:Ilavarasan M
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.