• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Farmers Day | இயற்கை விவசாயத்திற்கு திரும்பும் தருமபுரி விவசாயிகள்!

Farmers Day | இயற்கை விவசாயத்திற்கு திரும்பும் தருமபுரி விவசாயிகள்!

இயற்கை விவசாயம் செய்துவரும் விவசாயி

இயற்கை விவசாயம் செய்துவரும் விவசாயி

National Farmers Day | தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் சிலர் இயற்கை விவசாய முறைகளை கையாண்டு, நல்ல மகசூலை எடுத்து வருகின்றனர்.

  • Share this:
    வேறு எந்த  தொழில் வளமும் இல்லாத தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. தருமபுரி மாவட்டத்தின் மொத்த பரப்பளவான 4 லட்சத்து 49 ஆயிரத்து 777 ஹெக்டேரில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 740 ஹெக்டேர் சாகுபடி பரப்பாக உள்ளது.

    இதில் மழையை நம்பி மேற்கொள்ளப்படும் மானாவாரி விவசாயமே அதிகம் நடைபெற்று வருகிறது. பல்வேறு பூச்சிக் கொல்லி மருந்துகள், ரசாயன உரங்களின் தொடர் பயன்பாட்டால் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் காலப்போக்கில் தரிசு நிலங்களாக மாறிப் போயின. மேலும், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு பூச்சிக் கொல்லி மருந்துகளும், ரசாயன உரங்களும் காரணமாக இருந்து வருகின்றன. இந்நிலையில், மாவட்டத்தில் விவசாயிகள் சிலர் இயற்கை விவசாய முறைகளை கையாண்டு, நல்ல மகசூலை எடுத்து வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் தாதநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தருமன் என்ற விவசாயி, தனது 5 ஏக்கர் நிலத்தில், முழுவதும் இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார். 5 அடுக்கு முறையில் காய்கறிகள் பயிரிட்டும், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து அதை சிறந்த முறையில் பயிரிட்டும் சாதனை படைத்து வருகிறார்.

    தற்போது, கருப்பு கவுனி, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா மற்றும் வாழையில் பப்பாளி ஊடுபயிராகவும், தக்காளி, பீர்க்கன் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களையும் இயற்கை முறையில் பயிரிட்டு இருப்பதாகத் தெரிவிக்கும் தருமன், அரசு இயற்கை விவசாய முறைகளை ஊக்கப்படுத்தி அதன் பயன்களை விவசாயிகள் மத்தியில் எடுத்துச் செல்ல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பூச்சிக் கொல்லி மற்றும் ரசாயன உரங்களை பயன்படுத்துவதை விட இயற்கை முறையில் விவசாயம் செய்வதால் செலவுகள் குறைவதாகவும் கூறுகிறார்.

    அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயதிற்கு திரும்ப வேண்டும் என்றும், இயற்கை முறையில் விளைவிக்கும் பொருட்களை சந்தைப்படுத்த அரசு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

    இண்டூர் அடுத்துள்ள ராஜாகொல்ல அள்ளியைச் சேர்ந்த விவசாயியும், சுற்றுச் சூழல் ஆய்வாளருமான முனைவர் செந்தில்குமார் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவரும், தன் நிலத்தின், ஒன்றரை ஏக்கரில் கருப்பு கவுனி நெல்லை சாகுபடி செய்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறும்போது, ‘இதுபோன்ற பாரம்பரிய நெல் ரகங்களில் அதிக அளவிலான சத்துகள் உள்ளன. தற்போதைய சூழலில் அதிகரித்து வரும் சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு அருமருந்தாக இதுபோன்ற பாரம்பரிய அரிசி ரகங்கள் உள்ளன’ என்றார்.

    இதே போன்று நாகர்கூடல், எச்சன அள்ளி, அன்னசாகரம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், மொரப்பூர், கம்பைநல்லூர், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாயிகள் பலர் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். விவசாயிகள் மீண்டும் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்வதும், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பதும் விவசாயிகள் தினத்தில் ஆறுதலாக இருக்கின்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: