தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்று முன்தினம் 100.4 டிகிரியும், நேற்று 99.6 டிகிரிவெப்பநிலையை எட்டியுள்ளது. இந்த கடுமையான வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வெயிலால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் கால்நடைகள் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. கடுமையான வெயிலில் இருந்து தங்களின் கால்நடைகளை காப்பாற்ற தருமபுரி மாவட்டம் ,கடத்தூர் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு ஸ்பிரே மூலம் நாள்தோறும் மூன்று முறை தண்ணீர் பீய்ச்சி அடித்து குளிப்பாட்டி வருகின்றனர்.
அவ்வாறு குளிப்பாட்டுவதால், பால் கறக்கும் பசு மாடுகள் வெயிலின் தாக்கத்தில் இருந்து ஓரளவுக்கு பாதுகாக்கின்ற நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கடத்தூர் அடுத்த ராணி மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி
சவுண்டப்பன் கூறும் போது, கடும் வெயிலின் காரணமாக குடிப்பதற்கே தண்ணீர் இல்லை. இதில் கால் நடைகளும் பாதிக்கிறது. பசுமாடுகளின் உயிர்களை காப்பாற்ற ஸ்பிரே மூலம் தண்ணீர் அடித்து குளிப்பாட்டுகிறோம்.
தற்போது அடிக்கும் வெயிலுக்கு காலை 10 மணி வரை மட்டுமே பசுமாடுகள் தாங்கக்கூடிய நிலையில் உள்ளது. அதற்குப் பிறகு பிடித்து நிழலில் கட்டி குளிக்க வைத்தால் மட்டுமே காப்பாற்ற முடியும். அவ்வாறு செய்ய வில்லை எனில் இந்த வெயிலின் தாக்கத்தால் மாடுகள் மூச்சிரைத்து மயங்கி விழுந்து விடுகிறது. இதனால் மாடுகளுக்கு நாள் தோறும், ஐந்து கேன் தண்ணீர் தெளிக்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு 100 லிட்டர் தண்ணீர் வரை ஒரு பால்பசுமாடுகளுக்கு தெளிக்கப்படுகிறது. அவ்வாறு இல்லை யெனில் மாடுகள் இறக்க நேரிடும். மனிதன் குடிக்கவே தண்ணீர் இல்லை இதில் கால்நடைகளை காப்பாற்றவே பெரும் சிரமமாக உள்ளது. இங்கு,எஸ்.என்., எப்.எச்.எப்.,ஜெர்சி,கிர் பசுமாடுகள் வளர்த்து வருவதாகவும், அதன் மூலம் பிழைப்பு நடத்தி வருவதாகவும் விவசாயி கூறினார்.
செய்தியாளர் : ஆர்.சுகுமாா்இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.