தருமபுரி அருகே 11.65 லட்சம் மதிப்பில் புதிதாக போடப்பட்ட சாலையின் அவலத்தை கிராம மக்கள் சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட இண்டமங்கலம் ஊராட்சி பி.கே.பள்ளம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் ராஜிகொட்டாய் முதல் கண்ணர் கரை வரை ரூ.11.65 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. தொடர்ந்து சாலை அமைப்பதற்காக முன்பிருந்த தார் சாலையை ஜேசிபி எந்திரம் வைத்து பெயர்த்து அப்புறப்படுத்தினர். இதனை தொடர்ந்து புதிய தார் சாலை அமைப்பதற்கு ஜல்லி கற்கள் அமைக்கப்பட்டது.
மேலும் இரண்டு தளம் அமைக்கப்படும் நிலையில், இந்த சாலையில் ஒரு தளம்(சிப்ஸ்) மட்டுமே தார்சாலையை அமைத்து உள்ளனர். அப்போது கிராம மக்கள் இரண்டு தளம் போடாமல் ஒரே தளத்தில் தார்சாலை அமைக்கப்படுவதால் தரம் இல்லை எனக்கூறி ஒப்பந்ததாரரை வேலை செய்ய வேண்டாம் என தடுத்து நிறுத்தினர்.
அப்பொழுது நீங்கள் எங்கு வேண்டுமானாலும் புகார் செய்யுங்கள், நான் ஆட்சியர் முதல் அனைத்து அதிகாரிகளுக்கும் 2% கமிஷன் தருகிறேன். எதுவும் செய்ய முடியாது என ஒப்பந்ததாரர் தெரிவித்ததாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை அடுத்து ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தார்சாலை தரமாக அமைக்கப்படவில்லை, தரமற்ற முறையில் ஒரே தளத்தில் சிறு ஜல்லி கற்களை கொண்டு தார்சாலை அமைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்வார்கள் என வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் யாரும் ஆய்வு செய்வதற்காக வரவில்லை. இந்நிலையில் தார்சாலை முழுவதுமாக அமைத்து முடித்துவிட்டனர்.
ஆனால் தார் சாலை அமைத்து இரண்டு நாட்களிலேயே ஆங்காங்கே ஜல்லிக் கற்கள் பெயர்ந்து வருகிறது. வாகனங்கள் அதிகமாக செல்வதால் ஜல்லி கற்கள் பெயர்ந்து தினமும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் கீழே விழுந்து காயம் அடைந்துள்ளனர்.
இந்த தார்சாலை தரமற்ற முறையில் அமைக்கப்படடுள்ளது என புகார் தெரிவித்தும் அரசு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், கிராம மக்கள் தரமற்ற முறையில் உள்ள தார் சாலையை கையில் பெருக்கி அள்ளி அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
தார்சாலை மண் கற்களுக்கு, மேல் இரண்டு தளமாக அமைக்கப்பட வேண்டும். ஆனால் ஒரே தளத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் தரமற்ற முறையில் இருக்கிறது. இதனை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து இந்த தார் சாலையை தரமான முறையில் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தருமபுரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் மரு.வைத்தியாநாதனை தொடர்பு கொண்டு கேட்டபோது, தார்சாலை தரமற்ற முறையில் போடப்பட்டது குறித்து, எந்த தகவலும் எனது பார்வைக்கு வரவில்லை. தற்போது இந்த புகார் குறித்து, திங்கட்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்த பிறகு, புதியதாக தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
செய்தியாளர் : ஆர்.சுகுமாா்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dharmapuri