ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சோதனையில் நகை, பணம், பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை - கே.பி.அன்பழகன்

சோதனையில் நகை, பணம், பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை - கே.பி.அன்பழகன்

கே.பி.அன்பழகன் வீட்டில் ரெட்டு

கே.பி.அன்பழகன் வீட்டில் ரெட்டு

KP Anbalagan : பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ஊழல் செய்ததை மறைக்கவே தனது வீட்டில் சோதனை நடத்தியிருக்கின்றனர் என கே.பி.அன்பழகன் கூறினார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ஊழல் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டிய நிலையில், அந்த 500 கோடி ஊழல் செய்ததை  மறைக்கவே தனது வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தியிருக்கின்றனர் எனவும் தனது வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்றப்பட வில்லை  என்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் இல்லம் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் இல்லம், நிறுவனங்கள் என 58  இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். குறிப்பாக  தருமபுரி மாவட்டம் கெரஹோட அள்ளி பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீடு மற்றும் கரியமங்கலம்  பகுதிகளில் மட்டும் 19 இடங்களில் சோதனையானது நடத்தப்பட்டது.

முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீட்டிற்கு இரு வாகனங்களில் வந்த 8-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிகாலை 5 மணிக்கு நுழைந்து சோதனையை துவங்கினர். இந்த சோதனையானது இரவு 10 மணி வரை நீடித்தது.

அன்பழகன் வீட்டின் அருகில் வசிக்கும் அவரது உறவினரான பத்மாவதி என்பவரது வீட்டில்  காலை 6 மணிக்கு துவங்கிய சோதனை  மாலை 4 மணி அளவில் நிறைவடைந்தது.

10 மணி நேரமாக பத்மாவதி என்பவரின் இல்லத்தில் நடைபெற்ற சோதனையில்  அவரது வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்களை கைப்பற்றி லஞ்ச ஒழிப்பு துறையினர் எடுத்து சென்றனர். இதே போன்று சோதனை நடைபெற்ற மற்ற பகுதிகளிலும் இருந்து ஆவணங்கள், பணம் முதலியவை கைப்பற்றபட்டன. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் வீட்டில் சோதனை நடத்தப்படும் தகவல் அறிந்து ஏராளாமான கட்சியினர் காலை முதலே வீட்டிற்கு முன்பு குவிந்து வந்தனர்.

அவர்களுக்கு காலை உணவாக பொங்கல், டீ, பிஸ்கட் போன்றவையும், மதியம் வெஜிடபிள் பிரியாணியும் வழங்கப்பட்டது. இதனிடையே சோதனை நடைபெறும் தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கருப்பண்ணன், முல்லை வேந்தன் ஆகியோர் பிற்பகலில் இருந்து மாலை வரை அன்பழகனின் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தனர். மாலை அவர்கள் கிளம்பி சென்ற சிறிது நேரத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வீரமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், உதயகுமார் ஆகியோர் அடுத்தடுத்து வந்தனர்.

மாலை 7 மணி முதல் வீட்டு வாசலில் அவர்கள் காத்திருந்த நிலையில் அதிமுகவினர் அவ்வப்போது தமிழக அரசை கண்டித்துமுழக்கம் எழுப்புவதுடன் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் வீடு பரபரப்புடன் இருந்து வந்தது.

இந்நிலையில் இரவு 9.30 மணி அளவில் அதிமுக தொண்டர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்து ரகளையில் ஈடுபட்ட நிலையில், கே.பி.அன்பழகன் வீட்டு வாசலில் வந்து தொண்டர்களுக்கு கையசைத்தார். இந்நிலையில் ஏராளமான போலீசார் லத்தியுடன் அன்பழகன் வீட்டு வாசலில் குவிக்கப்பட்டு, அதிமுகவினரை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து இரவு 10 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனையை நிறைவு செய்து வீட்டில் இருந்து வெளியேறினர்.

இதனையடுத்து வீட்டை விட்டு வெளியில் வந்த கே.பி.அன்பழகனை ஆரவாரத்துடன் தொண்டர்கள் வரேவற்றனர். இந்நிலையில் 3 மணி நேரமாக வீட்டு வாசலில் காத்திருந்த முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகனுடன் வீட்டிற்குள் சென்றனர். அரை மணி நேரத்திற்கு பின்பு வீட்டில் இருந்து வெளியே வந்த கே.பி.அன்பழகன் மற்றும் சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தனர். முதலில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ஊழல் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார் எனவும், அந்த 500 கோடி ஊழல் செய்ததை  மறைக்கவே தனது வீட்டில் சோதனை நடத்தியிருக்கின்றனர் என தெரிவித்தார்.

பொங்கல் பரிசு தொகுப்பில் தரமில்லாத 21 பொருட்கள் முழுமையாக மக்களுக்கு சென்றடையவில்லை எனவும், இதை மறைக்கவே  சோதனை நடத்தப்பட்டது எனவும் தெரிவித்தார். ஒரு சில தொலைக்காட்சிகளில் கட்டு கட்டாக பணத்துடன் எனது புகைபடத்தையும் சேர்த்து தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டது என கூறிய அவர், இங்கே நடந்த  சோதனையில் நகை, பணம், பொருள் என எதுவும்  கைப்பற்ற பட  வில்லை எனவும், தவறான தகவலை ஊடகங்கள் வெளியிட்டு, அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் எனவும் குற்றம்சாட்டினார்.

தவறான செய்தி வெளியிட்ட தொலைக்காட்சிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், கடந்த ஆட்சியில் 2500 ரூபாய் பொங்கல் பரிசாக எடப்பாடி பழனிச்சாமி  வழங்கினார், அதை மக்கள் இப்போது பேசிவிடக்கூடாது என்பதற்காக ஊழல் பிரிவை ஏவி  பொய்யான சோதனை நடத்தி இருக்கின்றனர் எனவும், சோதனையில் பொருள், நகை, பணம், பொருள் எதுவும் கைப்பற்ற பட வில்லை என சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையெழுத்திட்டு சென்றுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

Read More : கள் இறக்கி விற்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு - சீமான்

தொலைக்காட்சிகளில் தவறான செய்தி வெளியிட்டதற்கு  மறுப்பு தெரிவித்து செய்தி வெளியிட வேண்டும் எனவும், இல்லை எனில் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரித்த அவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 2500 ரூபாய் வழங்கினார்.  தற்போது அதையும் கொடுக்காமல் 500 கோடி ஊழல் செய்ததை மறைக்கவே இந்த சோதனை என்று மீண்டும் தெரிவித்தார்.

Must Read : மாணவி லாவண்யாவை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லை - தஞ்சாவூர் எஸ்.பி விளக்கம்

லஞ்ச ஒழிப்பு துறை செய்திக் குறிப்பில் நகை, பணம் கைப்பற்றப்பட்டு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், லஞ்ச ஒழிப்பு காவல் துறை கையெழுத்திட்டு கொடுத்த கடிதத்தில் நகை, பணம், பொருள் எதுவும் கைப்பற்றப்பட வில்லை என்றுதான் எழுதி கொடுத்து இருக்கின்றனர் எனவும், 12 மணி நேரத்திற்கு மேலாக  துருவி துருவி விசாரித்து போலீஸ் எதையும் செய்ய வில்லை எனவும் சி.வி.சண்முகம் தெரிவித்தார். இரவு சோதனை நிறைவடையும் வரை காத்திருந்த அதிமுக தொண்டர்கள் அதன் பின்பே கலைந்து சென்றனர்.

செய்தியாளர் - சு.குருசாமி, தருமபுரி

First published:

Tags: ADMK, DVAC