பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள இருளர் இன மக்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் சுமார் 70 தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. வீடுகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பெய்த கனமழையின் காரணமாக பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கி வீடுகளை விரைந்து கட்டிக்கொடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட இருளப்பட்டி பஞ்சாயத்தில் உள்ள இருளப்பட்டி, நாகலூர், காமராஜர் நகர், இந்திரா நகர் , பீரங்கி நகர் என 5 கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களில் ஐந்தாயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் இந்திரா நகரில் 100க்கும் மேற்பட்ட இருளர் இன பழங்குடியின மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் சுமார் 70 தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. இந்த வீடுகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பெய்த கனமழையின் காரணமாக பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது.
இதனை அறிந்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக தமிழக அரசு உத்தரவுப்படி குறைந்த அளவு பாதிப்புள்ள வீடுகளுக்கு , 27 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 32 வீடுகள் மராமத்து செய்ய கூறியுள்ளது.
22 வீடுகள் முழு சேதமானதாக கருதப்பட்டது. இதில், 16 வீடுகள் புதிதாக கட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளால் பசுமை வீடுகள் கட்ட உத்தரவு வழங்கப்பட்டது. இதில், 12 வீடுகள், 3 லட்சம் ரூபாய் மதிப்பிலும், 4 வீடுகள் 2.10 லட்சம் மதிப்பில் கட்டும் பணியை இருளர் இன மக்கள் தொடங்கினர்.
ALSO READ | பன்றி குறுக்கே வந்ததால் நேர்ந்த விபத்து : மினி வேன் மீது அரசு பேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு
இதில் நான்கு தவணைகளாக பணம் கொடுப்பதாக உறுதியளித்த அதிகாரிகள் இதுவரை ஒருமுறைகூட வீடு கட்டியதற்கான பில் தொகை வழங்கவில்லை. இதில் சிலர் வீடு கட்ட முடியாமல் பணமில்லாமல் தவித்து வருகின்றனர். அதிகாரிகளின் பேச்சை நம்பி , தாங்கள் குடியிருந்த வீடுகளை இடித்துவிட்டு பனியிலும், வெயிலிலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களை வைத்துக்கொண்டு சிரமப்பட்டு வந்துள்ளனர். திடீரென இரண்டு நாள் பெய்த பலத்த மழையால் அவர்களின் உணவு பொருட்கள் , உடை, உடைமைகள் மற்றும் அரசு ஆவணங்கள் முற்றிலும் நனைந்து சேதமடைந்துள்ளன.
இதுகுறித்து பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முறையிட்டும், மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே கட்டிய, கட்டிக்கொண்டு இருக்கும் வீடுகளுக்கு முழு பில் தொகையும் வழங்கவேண்டுமென இருளர் இன மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதே போன்று பட்டுகோனாம்பட்டி, சித்தேரி,மஞ்சவாடி,போதகாடு ஆகிய பகுதிகளில்,255 வீடுகளுக்கு பில் தொகை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : ஆர்.சுகுமாா், தருமபுரி இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.