பெண்களிடம் தகராறு செய்தவர்களை தட்டிக்கேட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய கோரி பாமகவினர் சாலை மறியல் செய்தததால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த புது ஒட்டுபட்டி பகுதியை சேர்ந்த பொன்னியப்பன் என்பவரின் மனைவி கவிதா, குமரன் என்பவரின் மனைவி புவனேஸ்வரி ஆகிய இருவரும் நேற்று மாலை 6:00 மணியளவில் புது ஒட்டுபட்டியில் இருந்து பண்டாரசெட்டிப்பட்டிக்கு செல்லும் கொடிவழிபாதையில் வாக்கிங் சென்றனர். அப்போது பண்டாரசெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த (மாற்று சமூகத்தைச் சேர்ந்த) சிலர் அங்கு மது அருந்தியுள்ளனர்.
இதனைப் பார்த்த புவனேஸ்வரி, கவிதா ஆகியோர் அவர்களிடம் இங்கு மது குடிக்க வேண்டாம் என கூறவே , இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அந்த பெண்கள் தங்கள் கணவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து செல்போனில் தெரிவித்தனர். இதனை அடுத்துடுத்து பொன்னியப்பன், குமரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மது அருந்தி கொண்டு இருந்தவர்களிடம் சென்று பெண்களை தவறாக பேசியது குறித்து கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.
Also read: பூணூல் அறுப்பு போராட்ட அறிவிப்புக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கண்டனம்
இதில் பொன்னியப்பன், குமரன் இருவரையும் அங்கிருந்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என கூறி புது ஓட்டுப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பாமகவினர் பொம்மிடி ரயில் நிலையம் முன்பு சேலம் - தருமபுரி செல்லும் சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த அரூர் போலீஸ் டிஎஸ்பி பெனாசிர் பாத்திமா, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.இதில் சமரசம் ஏற்படாததால் தொடர்ந்து பா.ம.க., வினர், கடந்த இரண்டு மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொன்னியப்பன் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் உள்ள, வார்டு, 7ல் பா.ம.க., வேட்பாளராக போட்டியிட்டு உள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாமலை சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு நாளை காலை 10 மணிக்குள் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என உறுதி கூறவே இரவு 10:15 மணியளவில் சாலை மறியல் கைவிடப்பட்டது.இந்த சாலை மறியலால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்தியாளர் - ஆர்.சுகுமாா் (தருமபுரி) இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.