தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே மர்மமான முறையில் பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொரப்பூர் அடுத்த ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த மூக்கன் மனைவி இந்திராணி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்திராணிக்கு ராஜேஸ்வரி என்ற மகளும் மற்றும் ரமேஷ் என்ற மகனும் உள்ளார். இருவரும் அதே ஊரில் வசித்து வருகின்றனர். மகள் ராஜேஸ்வரியின் கணவர் வெளியூரில் வேலை செய்து வருவதால், மகளுடன் வசித்து வந்துள்ளார். ராஜேஸ்வரியின் மகள் சுமித்ரா கல்லூரியில் படித்து வருகிறார்.
நேற்று ராமாபுரத்தில் உள்ளவர்கள் குழுவாக சேர்ந்து பொள்ளாச்சி மாசானியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இதில் இந்திராணியின் மகன் ரமேஷ், மகள் ராஜேஸ்வரி இருவரும் சென்றுள்ளனர். இந்நிலையில் மகள் வீட்டில் இந்திராணி மட்டும் தனியாக இருந்துள்ளார். கல்லூரிக்கு சென்ற பேத்தி மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது பாட்டி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை தொடர்ந்து சத்தமிட்டவாறு, தண்ணீர் எடுத்து வந்து தெளித்துள்ளார். ஆனால் இந்திராணியின் உயிர் பிரிந்தது.
தொடர்ந்து மொரப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தருமபுரி காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன், நேரில் ஆய்வு செய்தார். அப்பொழுது சடலத்தின் அருகே ஒரு கத்தியும், எலுமிச்சம் பழமும் இருந்துள்ளது. மேலும் காதில் தோடு இல்லாமல் இருந்துள்ளது. இந்திராணி உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு மந்திரம் போட்டு குணப்படுத்துபவர். இதனால் யாரேனும் மந்திரம் போடுவதற்காக வந்து, அடித்து கொலை செய்துவிட்டு நகையை பறித்து சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனையடுத்து இந்திராணியின் பேத்தியிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். மேலும் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வர வழைத்து தடயங்கள சேகரித்தனர். தொடர்ந்து இறந்தவரின் சடலத்தை காவல் துறை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மொரப்பூர் அருகே பட்டப் பகலில் தனியாக இருந்த பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : ஆர்.சுகுமார் (தருமபுரி)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.