தருமபுரியில் உள்ள எரிவாயு தகன மேடையில் குவியும் கொரோனா சடலங்களை எரிக்க முடியாமல் ஊழியர்கள் திணறி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. தருமபுரி மாவட்டத்திலும் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் எங்கு பார்த்தாலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
குறிப்பாக கொரோனா நோயால் பாதிக்கபட்டவர்களுக்கு மருத்துவ கல்லூரி நிர்வாகத்தால் படுக்கை வசதிகள் ஒதுக்கபடாததால் தரையிலேயே படுத்தும், மருத்துவமனை வராண்டாவில் நின்றுக்கொண்டும் ஏராளமானோர் நீண்ட நேரமாக சிகிச்சைக்காக காத்துக்கிடக்கும் அவலம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
தருமபுரியில் உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே உள்ளது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே நகராட்சிக்கு சொந்தமான பச்சையம்மன் மயானத்தின் அருகே தகன மேடை உள்ளது.
இந்த தகன மேடையில் மாதம் 25 முதல் 30 சடலங்கள் எரிக்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தருமபுரி கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
அப்போது வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறப்பவர்களின் பலருடைய உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்படாமல் ஆம்புலன்ஸ் மூலம் நேரடியாக தருமபுரி பச்சை அம்மன் மயான தகன மேடைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் தினசரி ஐந்து முதல் பத்து சடலங்கள் வருவதாக கூறப்படுகிறது.
இதனால் இரவு பகலாக சடலங்களை எரிக்க முடியாமல் தொழிலாளர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சடலங்கள் அதிகமாக வருவதால் தகன மேடை எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது. இறந்தவர்களின் உடல்களை எரிக்கும் போது உறவினர்கள் அருகே நிற்கும் நிலையும் உள்ளது. இந்த சமயத்தில் அவர்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளி கடைபிடிக்காமல் உள்ளனர். இதனால் வைரஸ் தொற்று ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.
அதுவும் குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக எரிவாவு தகனமேடை பழுதடைந்து உள்ளதால், தகன மேடைக்கு வரும் உடல்களை அருகே உள்ள சுடுகாட்டில் மரக்கட்டைகளை அடுக்கி வைத்து எரித்து வருகின்றனர்.
இதனால் ஊழியர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. தினசரி பத்துக்கும் மேற்பட்ட உடல்களை எரியூட்டி வருகின்றனர். சடலங்கள் எரிக்க அதிகபட்சமாக ரூ.13 ஆயிரம் வரை வாங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மேலும் இந்த சுடுகாடு தேசிய நெடுஞ்சாலை அருகே இருப்பதாலும், அருகே மருத்துவமனை உள்ளதாலும் தொடர்ந்து, சடலங்களை எரிப்பதால் ஏற்படும் புகைமூட்டம் சாலையில் செல்பவர்களுக்கும், நோயாளிகளுக்கு மூச்சு திணறலை ஏற்படுத்தும் சூழல் உள்ளது.
எனவே உடனடியாக எரிவாயு தகன மேடையில் சரிசெய்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தியாளர் - ஆர்.சுகுமாா்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.