Home /News /tamil-nadu /

தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு: 200 போலீசார் பாதுகாப்பு- சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம்

தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு: 200 போலீசார் பாதுகாப்பு- சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம்

சிதம்பரம் கோவில் பக்தர்கள் தரிசனம்

சிதம்பரம் கோவில் பக்தர்கள் தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் கடும் எதிர்ப்பை மீறி கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மூலவரான நடராஜருக்கு அருகில் உள்ள கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி கும்பிடுவது தொன்று தொட்டு வழக்கம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டபோது கனகசபை மீது ஏறி யாரும் சாமி தரிசனம் செய்யக்கூடாது என கோயில் தீட்சிதர்கள் அறிவித்திருந்தனர். ஆனால் கொரோனா தொற்று குறைந்த பிறகும் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதற்கு பக்தர்களை தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து சிதம்பரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பக்தர்களை அனுமதிக்க கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், தமிழக அரசு இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யலாம் என தமிழக அரசு இன்று அரசாணை பிறப்பித்தது.

இதையடுத்து இன்று மதியம் வருவாய்த்துறை காவல்துறை, தீட்சிதர்கள் ஆகியோர் இணைந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் அரசாணையை அமல்படுத்துவதற்கு உரிய கால அவகாசம் வேண்டும் என்று தீட்சிதர்கள் கேட்டனர். ஆனால் அந்த கோரிக்கையை வருவாய் துறையினர் நிராகரித்து விட்டனர்.

இந்நிலையில் இன்று மாலை நடராஜர் கோயிலில் பக்தர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்தனர்.

ஏற்கெனவே கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்திய தெய்வத் தமிழ் பேரவை, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பக்தர்களோடு சென்று கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உள்ளிட்டோர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கோயில் தீட்சிதர்கள் சார்பில் வழக்கறிஞர் சந்திரசேகர் போலீசாரிடம், தங்களது கருத்துக்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கடிதம் அளித்தார். இதையடுத்து பக்தர்கள் கொஞ்சம் கொஞ்சம் பேராக கனகசபைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பக்தர்கள் மற்றும் தமிழ் அமைப்பினர், ‘சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்திரவுபடியும், பக்தர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் நடத்திய போராட்டத்தின் அடிப்படையிலும் நடராசர் கோயிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதன்படி இன்று சாமி தரிசனம் செய்தோம். தீட்சிதர்கள் தங்களது தரப்பு விளக்கத்தை அள்த்தார்கள். அது அவர்களது உரிமை. அதே நேரத்தில் இந்த வழிபாட்டு உரிமை தொடர்ந்து நடந்திட தமிழக அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.

மெட்ரோவைப் போல புறநகர் ரயில்களில் ஏசி வசதி - ரயில்வே அமைச்சர்

ஏற்கெனவே போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு கூறுகையில், ‘அரசாணைப்படி இன்று கோயிலில் சென்று கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தோம். தீட்சிதர்கள் சரியாக தீபாராதனை காட்டவில்லை. இதுபோன்ற நிலை இருக்கக்கூடாது. தமிழக அரசு அனைத்து பக்தர்களும் சமமான முறையில் வழிபடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இந்த கோவிலை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை ஏற்று, தனியாக செயல் அலுவலரை நியமிக்க வேண்டும் என கூறினார்.

ஏற்கெனவே சபை மீது ஏறி போராட்டம் நடத்திய பெண் பக்தர் ஜெயசீலா கூறுகையில், ’நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி வழிபடுவதற்கு அனைத்து அமைப்பினரும் போராட்டம் நடத்தினார்கள். உதவியாக இருந்தார்கள். தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையே கோயில் தீட்சிதர்கள் சார்பில் செய்தியாளரிடம் பேசிய வழக்கறிஞர் சந்திரசேகர், ’இன்று காலை அரசாணை பிறப்பித்து கால அவகாசம் கூட கொடுக்காமல் உடனடியாக அதை அமல்படுத்துவதாக தமிழக காவல்துறையும், அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஒரு கோயிலில் இவ்வளவு போலீசாரை வைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தது தவறு. நீதிமன்றத்தின் சில உத்தரவுகள் இதில் மீறப்பட்டு இருக்கிறது. தமிழக அரசு இதுபோன்றுதான் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
Published by:Karthick S
First published:

Tags: Cuddalore

அடுத்த செய்தி