Home /News /tamil-nadu /

எஸ்.பி.வேலுமணி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு : ரெய்டும் பின்னணியும்

எஸ்.பி.வேலுமணி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு : ரெய்டும் பின்னணியும்

எஸ்.பி. வேலுமணி

எஸ்.பி. வேலுமணி

S.P. Velumani : வருமானத்தை விட அதிகமாக 58 கோடியே 23 லட்ச ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் மற்றும் 3 நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது புதிதாக சொத்துக்குவிப்பு வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் அவர் தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோயம்புத்தூர், சென்னை, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் காலை முதல் சோதனை நடக்கிறது. கோவை குனியமுத்தூர் அருகே சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டிற்கு காலை 6.30 மணிக்கு அதிகாரிகள் சென்றனர். டிஎஸ்பி மதியழகன் தலைமையில் 5 அதிகாரிகள் சோதனையைத் தொடர்ந்து வருகின்றனர்.

    கோவை மாவட்டம் குனியமுத்தூரை சேர்ந்த எஸ்.பி.வேலுமணி, மிகவும் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தை பழனிசாமி, மில் தொழிலாளி ஆவார். மற்றபடி அவரது குடும்பத்துக்கு பெரிய அளவில் சொத்துக்கள் கிடையாது. அதிமுக ஆட்சியில் 2016ம் ஆண்டு முதல் 2021 மே மாதம் வரை உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. வேலுமணியின் சகோதரர் அன்பரசன் மற்றும் அவரது மனைவி ஹேமலதா ஆகியோர், செந்தில் அன்ட் கோ நிறுவனத்தின் 100 சதவீத பங்குதாரர்கள் ஆவர்.

    2016 முதல் 2021ஆம் ஆண்டு வரை தம்மிடமும், மனைவி, வாரிசுகள் பெயரில் 33 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருந்ததாக வேலுமணி கணக்கு காட்டியிருந்தார். ஆனால் அதே காலட்டத்தில் வேலுமணி, அவரது குடும்பத்தினர், உறவினர்கள் பெயரில் வருமானத்துக்கு அதிகமாக 58 கோடியே 23 லட்சத்து 97 ஆயிரத்து 52 ரூபாயை முறைகேடாக ஈட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது, வருமானத்தை விட மூவாயிரத்து 928 சதவீதம் அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்துள்ளது.

    வேலுமணி, அவரது உதவியாளர் சந்திரசேகர் ஆகியோர் முறைகேடாக டெண்டர் வழங்கியதாகவும், முறைகேடாக ஈட்டிய வருமானத்துக்கு கணக்கு காட்டுவதற்காக வேலுமணியின் சகோதரருக்கு சொந்தமான செந்தில் அன்ட் கோ நிறுவனம், 54 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு, போலி பில்களை தயாரித்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அமைச்சராக இருந்த போது மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட வேலுமணி, 32 நாட்கள் அங்கு தங்கியிருக்கிறார். குறிப்பாக, 2019ம் ஆண்டு 3 முறை சிங்கப்பூர் சென்று 14 நாட்கள் தங்கியிருந்த வேலுமணி, வெளிநாடுகளில் பல்வேறு நிறுவனங்கள் மூலம் கருப்பு பணத்தை மாற்றியதாகவும் புகார் எழுந்துள்ளது. வேலுமணியின் மனைவி வித்யா தேவி, மகன் விகாஷ், மகள் சாரங்கி ஆகியோரும் ஹாங்காங், மாலத்தீவுகள், தாய்லாந்து, லண்டன் என பல்வேறு நாடுகளில் 130 நாட்கள் தங்கியுள்ளனர். வேலுமணியின் உறவினர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் இருந்து, பல கோடி ரூபாய் பிற நிறுவனங்களுக்கு கைமாறியதும் கண்டறியப்பட்டுள்ளது.

    Must Read : அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த கட்டுப்பாடு - நீதிமன்றம் ஆணை

    இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், அன்பரசனின் மனைவி ஹேமலதா, சந்திரசேகர், சந்திரபிரகாஷ், கிருஷ்ணவேணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் வேலுமணியின் உறவினர்கள் சுந்தரி, கார்த்திக், விஷ்ணுவர்தன், சரவண குமார் ஆகியோர் மீதும், ஸ்ரீ மகா கணபதி நகைக்கடை, கான்ஸ்ட்ரோ மால் குட்ஸ் நிறுவனம், ஆலம் தங்கம் மற்றும் வைரம் விற்பனை நிறுவனம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

    Read More : நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் உறுதி

    லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஆய்வாளர் எழிலரசி புகார் அடிப்படையில் குற்றவியல் சதி, குற்றங்களை தூண்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: ADMK, Directorate of Vigilance and Anti-Corruption, DVAC, S.P. Velumani

    அடுத்த செய்தி