காரை பறிமுதல் செய்ததால் பழிவாங்கும் வெறி.. போலீஸ் ரோந்து வாகனத்தைக் கடத்திச்சென்ற குடிபோதை மருத்துவர்..

காரை பறிமுதல் செய்ததால் பழிவாங்கும் வெறி.. போலீஸ் ரோந்து வாகனத்தைக் கடத்திச்சென்ற குடிபோதை மருத்துவர்..

மருத்துவர் முத்து விக்னேஷ்

மருத்துவர் முத்து விக்னேஷ் மது போதையில் வாகனம் ஓட்டிவந்தது தெரியவரவே, போக்குவரத்து போலீசார் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்ததற்காக வழக்குப்பதிந்து அபராதம் விதித்துள்ளனர்

  • Share this:
அரக்கோணம், சால்பேட்டை, டவுன்ஹால் தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் முத்து விக்னேஷ்(31) . இவர் எம்.பி.பி.எஸ், எம்.டி, தோல் மருத்துவம் படித்துவிட்டு குன்றத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராகவும், மருத்துவ பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் 1.30 மணியளவில் சேத்துபட்டு சாலையில் தனது காரில் வந்துக்கொண்டிருந்தபோது, ஹாரிங்க்டன் சிக்னலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போக்குவரத்து போலீசார் மருத்துவர் முத்து விக்னேஷின் காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

மருத்துவர் முத்து விக்னேஷ் அளவுக்கதிகமாக மது போதையில் வாகனம் ஓட்டி வந்தது தெரியவரவே, போக்குவரத்து போலீசார் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்ததற்காக வழக்குப்பதிந்து அபராதம் விதித்துள்ளனர். காரை பறிமுதல் செய்துள்ளனர்.
இதனால், போக்குவரத்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட மருத்துவர் முத்து விக்னேஷ் கோபமாக அங்கிருந்து நடந்து சென்றுள்ளார்.

சரியாக இரவு 2 மணியளவில் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஈகா தியேட்டர் சிக்னல் அருகே நடந்து வந்துகொண்டிருந்தபோது அங்கு போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருப்பதை கண்டு ஆத்திரமடைந்துள்ளார். தனது காரை பறிமுதல் செய்து அபராதம் விதித்த போக்குவரத்து காவல்துறையினரை பழிவாங்குவதற்காக, அங்கு வாகன தணிக்கையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போலீசாரின் ரோந்து வாகனம் அருகே சென்று டேஷ் போர்டில் வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் சாவியை எடுத்து போலீசாரின் ரோந்து வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார்.
அந்த வழியாக வந்த ஒரு தனியார் காரின் உதவி மூலமாக போக்குவரத்து போலீசார்கள், குடிபோதையில் மருத்துவர் ஓட்டிச்சென்ற ரோந்து வாகனத்தை துரத்தியுள்ளனர்.
மதுபோதையில் இருந்த மருத்துவர் முத்து விக்னேஷ், போலீசார் தம்மை பின் தொடர்வதை அறிந்து கெங்கிரெட்டி பட்டி சப்வே அருகே ரோந்து வாகனத்தை வேகமாக இயக்க எதிரே வந்த ஆட்டோவின் மீது மோதி உள்ளார்.

இதனால் ஆட்டோ சாய்ந்து, ஆட்டோவில் பயணம் செய்த மூன்று நபர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்த பயணிகளை போலீசார், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவரை பிடித்த போலீசார் அவரிடம் இருந்து காவல்துறையின் ரோந்து வாகனத்தை கைப்பற்றினர். இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசார் கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்து பின், மருத்துவர் மீது புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த கீழ்ப்பாக்கம் போலீசார் நேற்று மாலை கைது செய்து மருத்துவர் முத்து விக்னேஷை சிறையிலடைத்தனர்.

மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த தனக்கு அபராதம் விதித்து காரை பறிமுதல் செய்ததால், போக்குவரத்து போலீசாரை பழிவாங்க ரோந்து வாகனத்தை கடத்தி சென்ற மருத்துவரின் செயலானது சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Gunavathy
First published: