Rain Update: அரபிக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை.. தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு

மழை

தென்மேற்கு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • Share this:
    அரபிக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக வலுப்பெற்றுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் விதர்பா முதல் தென் தமிழகம் வரை, நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூரில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், அடுத்த 2 நாட்களுக்கு தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் சூறைக் காற்றுடன் மிக கன மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என்றும், பின்னர், 15 மற்றும் 16-ம் தேதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெறக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதனால், குமரிக்கடல் பகுதி, தென்மேற்கு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி. மதுக்கூர், அதிராம்பட்டினம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதலே கரு மேகம் சூழ்ந்து காணப்பட்டது. இதையடுத்து குளிர்ந்த காற்று வீசிய நிலையில், திடீரென பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதேபோல், மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்தது. இதனிடையே தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறும் பட்சத்தில், அதற்கு "டவ்-தே" என பெயர் வைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும் படிக்க...  Petrol-Diesel Price | சென்னையில் பெட்ரோல் விலை ரூ.94ஆக உயர்வு.. 

    புயல் முன்னெச்சரிக்கையாக, தென் தமிழகம் மற்றும் கேரளாவிற்கு, அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். அதன்படி, மதுரை, கோவைக்கு தலா 2 குழுக்களும், அதிகம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் கேரளாவிற்கு 9 குழுக்களும் அனுப்பப்பட்டு உள்ளன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: