Home /News /tamil-nadu /

வங்கக்கடலில் நாளை காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் என கணிப்பு

வங்கக்கடலில் நாளை காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் என கணிப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சென்னையில் பெய்த மழையால், குடியிருப்புகளில் மீண்டும் மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை இன்று உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை (செவ்வாய்கிழமை) உருவாகும் என்று வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது. இதனால், கடலூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும், காரைக்கால், புதுச்சேரியிலும் மிக கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சென்னையில் பெய்த மழையால், குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர் மழையால் டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி அழுகத் தொடங்கியுள்ளன. காஞ்சிபுரத்தில் 3 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மீண்டும் முளைக்க தொடங்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திருவாரூரில் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் பெய்த மழையால் 42 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் அழுகி சேதமடைந்தன. அவற்றை அகற்றி விட்டு புதிதாக சம்பா, தாளடி பயிர்களை விவசாயிகள் மறுசாகுபடி செய்த நிலையில், மீண்டும் பெய்து வரும் மழையால் அவையும் தற்போது நீரில் மூழ்கியுள்ளன.

    நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான பயிர்கள் அழுகத் தொடங்கியுள்ளன. ஆறுகளிலும், வாய்க்கால்களிலும் மழைநீர் முழு அளவில் சென்று கொண்டிருப்பதால் வயல்களிலிருந்து மழைநீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே நாகத்தி பகுதியில் கோணங்கடுங்கலாறு வடிகால் வாய்க்கால் உடைந்து உபரி நீர் முழுவதுமாக விளை நிலங்களுக்குள் புகுந்துள்ளது. அதனை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் ஆய்வு செய்தார். மணல் மூட்டைகளைக் கொண்டு உடைப்புகளை தற்காலிகமாக அடைக்க உத்தரவிட்டார்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மூன்று நாட்களாக கொட்டித் தீர்த்த மழையால் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மீண்டும் தண்ணீரில் மூழ்கின. மறுநடவு செய்யப்பட்ட பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் சொல்லொணாத் துயரத்தில் உள்ளனர். இதேபோல, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சுற்றுவட்டாரத்தில் தொடர் மழையால் ஓடைகளில் இருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. இதன்காரணமாக சாத்துக்கூடல், இளமங்களம், ஆலிச்சிக்குடி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

    திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சனிக்கிழமை இரவு கொட்டித் தீர்த்த மழையால் நீர் நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறியது. இதன்காரணமாக கோடைக்காரன்பட்டி, வடுகபட்டி, சித்தாநத்தம், இடைக்காட்டனூர் உள்ளிட்ட கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மிதக்கின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக மூன்றாயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி மீண்டும் முளைக்கத் தொடங்கியுள்ளன.

    Must Read : எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழுவிவரம்

    இந்நிலையில், ஏற்கெனவே மழை பாதிப்பு ஆய்வு முடிந்து நிவாரணம் அறிவிக்கப்பட்ட நிலையில், வேளாண்துறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Flood, Rain Forecast, Weather News in Tamil

    அடுத்த செய்தி