"உங்கள் ஆலோசனை தேவை" - எடப்பாடி பழனிசாமியிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

"உங்கள் ஆலோசனை தேவை" - எடப்பாடி பழனிசாமியிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்தார்.

 • Share this:
  ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம், அத்தகைய ஜனநாயகம் காப்போம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதையடுத்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் திமுக கூட்டணி பெருவாரியாக வெற்றி பெறும் என்றே கணித்திருந்தன. அதன்படி, நேற்று 16-வது சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், தொடக்கம் முதலே திமுக கூட்டணி பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதிமுக கூட்டணி 80 தொகுதிகளை கூட கைப்பற்ற முடியாத சூழல் ஏற்பட்டது.

  தொடர்ந்து தேர்தல் முடிவுகளின் படி, தமிழகத்தில் திமுக கூட்டணி 159 இடங்களிலும், அதிமுக கூட்டணி 75 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போது திமுக 125 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

  இதையடுத்து, தமிழகத்தில் 1996-க்கு பின் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. திமுக வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேற்றைய தினம் முதல் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  இந்நிலையில், தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்க உள்ளதால் முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி இன்று காலை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அவர் தன்னுடைய நல்வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்தார்.

  சமூகவலைதளங்களில் தனக்கு வாழ்த்து தெரிவித்து வரும் தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து வருகிறார். அந்த வகையில், வாழ்த்து தெரிவித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்! என்று அவர் தெரிவித்துள்ளார்.
  Published by:Esakki Raja
  First published: