Home /News /tamil-nadu /

அசைவ உணவு உண்டதற்காக மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பு தாக்குதல் நடத்துவதா? – சீமான் கண்டனம்

அசைவ உணவு உண்டதற்காக மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பு தாக்குதல் நடத்துவதா? – சீமான் கண்டனம்

சீமான்

சீமான்

பாஜகவின் ஆட்சியதிகாரம் தொடங்கப்பட்டக் காலத்திலிருந்து, மோதல்களும், தாக்குதல்களும் அதிகரித்து வருவது நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் கீழானச் செயல்களாகும். - சீமான்

    டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதியில் அசைவ உணவு உண்டதற்காக தாக்குதல் நடத்திய ஏபிவிபி அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

    நேற்று ராமநவமி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், பல்கலைக்கழக உணவு விடுதியில் அசைவ உணவு பரிமாறப்பட்டதற்கு வலதுசாரி மாணவர் அமைப்பான ஏவிபிபி சங்க மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதற்கு இடதுசாரி அமைப்பு சங்கங்களைச் சேர்ந்த மாணவர்கள் பதில் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இரு தரப்புக்கும் மோதல் வெடித்துள்ளது. இதில் ஆறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்ததாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க - ராமநவமி அன்று அசைவ உணவு: ஜேஎன்யூ மாணவர்கள் இடையே மோதல்

    இந்த சம்பவம் குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதியில் அசைவ உணவு அருந்தியதற்காக, மாணவர்கள் மீது அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொடும் தாக்குதல் தொடுத்திட்ட செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. உணவு எனும் தனிமனித உரிமையில் தலையிட்டு, அதற்காகத் தாக்குதல் தொடுத்திருக்கிற பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தைச் சேர்ந்தவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

    இதையும் படிங்க - அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கிய தீர்மானம் செல்லும்- சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு

    உணவு, உடை, வழிபாடு போன்றவையெல்லாம் தனிமனித விருப்பங்களைச் சார்ந்தவையாகும். அவற்றை மறுத்து, இடையூறு செய்வதும், அதனைக் காரணமாகக் காட்டி வன்முறைக்கு வித்திடுவதுமான மதவெறிச்செயல்கள் எதன்பொருட்டும் ஏற்புடையதல்ல. இவையாவும் இந்திய அரசியலமைப்புச் சாசனம் வழங்கும் அடிப்படை உரிமைகளையே மறுக்கும் மனித உரிமை மீறலாகும். பாஜகவின் ஆட்சியதிகாரம் தொடங்கப்பட்டக் காலத்திலிருந்து, இதுபோன்ற மோதல்களும், தாக்குதல்களும் இந்தியப் பெருநிலம் முழுமைக்கும் அதிகரித்து வருவது நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் கீழானச் செயல்களாகும்.

    ஆகவே, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதியில் அசைவ உணவு உண்டதற்காக தாக்குதல் தொடுத்திட்ட அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது கல்லூரியின் நிர்வாக ரீதியாகவும், சட்டரீதியாகவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Seeman

    அடுத்த செய்தி